/indian-express-tamil/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-171628-2025-09-01-17-16-49.jpg)
கண்டந்திப்பிலி. சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவும் மூலிகையில் கண்டந்திப்பிலி முக்கியமானது. இது சளி, இருமல், தொண்டை புண், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நுரையீரல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும். கண்டந்திப்பிலியை உணவு மூலமே சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
திப்பிலி கொடி வகையை சார்ந்தது. இந்த கொடியில் இருக்கும் காய் திப்பிலி ஆகும். இந்த கொடியின் வேரும் மருத்துவக்குணங்கள் வாய்ந்தது. இது சிறு முடிச்சுகளுடன் நீண்டு மெலிதாக இருக்கும். இது கண்டந்திப்பிலி என்று அழைக்கப்படுகிறது. இந்த கண்டந்திப்பிலியை கொண்டு வைக்கப்படும் ரசம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கண்டந்திப்பிலி குச்சி - 4-5
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - தேவைக்கு
கொத்துமல்லித்தழை - தேவைக்கு
கடுகு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
செய்முறை:
வெற்று வாணலியில் கண்டந்திப்பிலி, மிளகு, தனியா, துவரம் பருப்பு என அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து வறுக்கவும். இறுதியாக வாணலி சூட்டில் சீரகம் சேர்த்து கொள்ளவும். அறை வெப்பநிலை வந்ததும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துகொள்ளவும்.
அடுப்பில் மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு (எண்ணெய்க்கு மாற்றாக நெய் சேர்க்கலாம்) கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து புளிக்கரைசலை ஊற்றவும். பிறகு மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து விடவும். கரைசல் கொதிக்கும் போது அரைத்து வைத்த பொடி சேர்த்து இறக்கி கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.
நன்மைகள்:
சுக்கு, மிளகு திப்பிலி மூன்றும் சேர்ந்து தயாரிக்கப்படும் திரிகடுகு சூரணத்தின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் திப்பிலியின் நன்மைகளை அறிவார்கள். திப்பிலி காயகல்ப மூலிகை என்று அழைக்கப்படுகிறது. திப்பிலி காரம் மற்றும் இலேசான இனிப்பு சுவையுடையது. இது உடல் சூட்டை அதிகரிக்கும். வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கும் தன்மை இதற்கு உண்டு. இது மிளகை விட காரமாக இருக்கும். உடலுக்குள் அதி வேகமாக செயல்படுத்த கூடியது. நிணநீர் நாளங்களை சுத்தம் செய்யும்.
கண்டந்திப்பிலி ரசம் 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துகொள்ளலாம். குழந்தைகளுக்கு சற்று காரம் குறைவாக சேர்க்கலாம். வயதானவர்கள், மற்றும் வயிற்று இரைப்பை புண் கொண்டவர்களும் காரம் குறைவாக சேர்க்க வேண்டும்.
சளி, இருமல் காய்ச்சல் நேரத்தில் ரசத்தை சூப் போல் குடிக்கலாம். கண்டந்திப்பிலி ரசம் உடல் உஷ்ணமாக்கினாலும் மலச்சிக்கல் இல்லாமல் செய்ய உதவும். சளி, இருமல், காய்ச்சல் நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் வரை இதை சேர்க்கலாம். உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் 1-2 நாட்கள் இந்த கண்டந்திப்பிலி ரசம் சாப்பிடலாம். குளிர்காலத்துக்கு ஏற்ற ரெசிபி இது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.