சுவையான கத்தரிக்காய் காராமணி கறி எப்படி செய்வது என்று பார்ப்போம். பிடிக்கவில்லை என்று சொன்னவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1/4 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கத்தரிக்காய் - 250 கிராம் நறுக்கியது
வேகவைத்த காராமணி - 1/2 கப்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2 நறுக்கியது
தட்டிய பூண்டு - 6 பற்கள்
பச்சை மிளகாய் - 4 கீறியது
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 நறுக்கியது
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், மிளகு, சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். அகலமான ஒரு பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
கடுகு பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் நசுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். இப்போது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். நன்கு பழுத்த நறுக்கிய தக்காளி சேர்த்து பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
தக்காளி நன்கு கரைந்து மசாலா கலவையாக மாறியதும் 250 கிராம் கத்திரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு நீரில் ஊறவைத்துநன்கு வெந்த தக்காளி மசாலாவில் நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து விடவும். பாத்திரத்தை மூடி குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேகவிடவும், இப்போது மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
வேகவைத்த காராமணி சேர்க்கவும். அரைத்த மசாலா விழுது, சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி, அடுப்பை அணைக்கவும். சுவையான கத்திரிக்காய் காராமணி கறி தயார்.