இந்திய சமையலறைகளில் தக்காளி இல்லாத சமையலே இல்லை என்று கூறும் அளவுக்கு தக்காளி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட தக்காளி, போர்த்துக்கீசியர்கள் மூலமாக 16-ம் நூற்றாண்டில்தான் இந்தியாவுக்கு வந்தது. ஆனால், தக்காளில் இந்தியர்களின் உணவில் இரண்டறக் கலந்துவிட்டது. அதனால்தான், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி விலை 200 ரூபாயைத் தொட்டு கெத்து காட்டியது.
மக்கள் தினமும் தக்காளியை சாம்பார், ரசம், குழம்பு என எல்லாவற்றிலும் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி குழம்பு என்று சமைக்கிறார்கள். சிலர் அவசரத்துக்கு தக்காளி சட்னி, தொக்கு, குழம்பு என்று செய்து போரடித்துவிட்டிருக்கும். ஆனாலும், வீட்டில் தக்காளிதான் இருக்கும், அதை வைத்து சமைக்க வேண்டும் என்ற நிலை இருக்கும். அப்படி போரடிக்கிறது என்றால் உங்களுக்காக, மணமணக்கும் கேரளா தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். கேரளா தக்காளி குழம்பு அட்டகாசமாக இருக்கும்.
கேரளா தக்காளி குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தேங்காய் - ½ கப் துருவியது
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் வானலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிய விடவும்.
அடுத்ததாக பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்ததும் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் வெங்காயம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை கொதிக்கும் தக்காளி குழம்பில் சேர்த்து கிளறி விடவும்.
அடுத்ததாக மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, பத்து நிமிடம் வரை கொதிக்க விடவும். இறுதியில் குழம்பு பச்சை வாடை நீங்கியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் மணமணக்கும் கேரளா தக்காளி குழம்பு தயார். நல்லா ஒரு வெட்டு வெட்டுங்க மக்களே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“