நாம் தினமும் பால் குடிக்கும்போது ஒதுக்கித் தள்ளும் பாலாடையில் இருந்து சுவையான நெய் தயாரிக்கலாம் என்பது பலருக்கு தெரியாது. பாலாடை என்றாலே பலர் ஒதுக்கி தள்ளுவர். இதனால் வீடுகளில் பாலை வடிகட்டியே டீ, காபி போடுவர். அப்படி வடிகட்டும் பாலாடை தூக்கி குப்பை தொட்டியில் வீசிவிடுவோம். ஆனால் இந்த எளிய செயல்முறை தெரிந்தால் இனி தூக்கி எறியமாட்டீர்கள்.
எல்லோரும் கறந்த பாலில் இருந்து தான் நெய் எடுக்க முடியும் என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் தினமும் வீட்டில் பயன்படுத்தும் பாக்கெட் பாலில் இருந்து கூட நெய் எடுக்க முடியும். ட்ரீட்ஸ் அண்ட் விலாக் பை நாஷிகா என்ற யூடியூப் சேனலில் பாக்கெட் பாலில் இருந்து நெய் தயாரிப்பது எப்படி என்பது விளக்கப்பட்டது.
பாக்கெட் பாலில் கொஞ்சமாக தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்கவிட்டுக் கொள்ள வேண்டும். நன்றாக காய்ச்சியதும் அப்படியே ஆற வைக்க வேண்டும்.
ஆறிய பின்னர் பாலை எடுத்து 6 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். 6 மணி நேரத்திற்கு நன்றாக உறைந்தப் பின் அதிலிருந்து பாலாடையை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பாலாடையை பிரீசரில் வைத்து சேமித்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு பாலாடை வந்தவுடன் நெய் உருக்கலாம்.
நெய் செய்யப் போகும் நாளில் பாலாடையை 4-5 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரீசரில் இருந்து வெளியே எடுத்து வைத்துவிட வேண்டும்.
இந்த பாலாடையை மிக்ஸி, விஸ்க் அல்லது பருப்பு மத்து ஏதேனும் ஒன்றின் மூலம் கடைந்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் போடும்போது நல்ல ஜில்லென்று இருக்கும் தண்ணீர் சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும்.
பாலாடையை அரைக்கும் போது கெட்டியானவுடன், சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். இப்படியாக வெண்ணெய் கிடைக்கும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை தனியாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெண்ணெய்யை ஐஸ்கட்டிகள் நிரம்பிய தண்ணீரில் சேர்த்து நன்றாக பிழிந்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நீண்ட நாளைக்கு வாசனையுடன் இருக்கும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானாதும், அதில் வெண்ணெய்யை போட்டு உருக்க வேண்டும். உருகும்போது நன்றாக கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 15-20 நிமிடங்களில் நெய் உருவாகிவிடும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு, முருங்கை கீரை அல்லது கறிவேப்பில்லையுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் நன்றாக ஆறிய பிறகு ஒரு பாத்திரத்தில் வடித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான நெய் ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் டிரை செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.