காலையில் பலருக்கு வடை சாப்பிட்டு விட்டு டீ குடிப்பது வழக்கம். சிலர் காலை உணவுடன் வடை சாப்பிடுவர். மேலும் நண்பகல், மாலை என நினைத்த நேரங்களில் வடை சாப்பிடுவோரும் உண்டு. இப்படி பலருக்கும் பிடித்த வடை பல நேரங்களில் அதிக எண்ணெய் உடன் இருக்கும். அல்லது கெட்டியாக இருக்கும்.
Advertisment
ஆனால் சின்ன சின்ன டிப்ஸ்களை பின்பற்றினால் எண்ணெய் குடிக்காத, புசுபுசுவென பஞ்சு போன்ற வடைகளை வீட்டிலே செய்யலாம். மை ஸ்டைல் குக்கிங் சேனல் என்ற யூடியூப் வீடியோவில் எண்ணெய் குடிக்காத வடை செய்வதற்கான எளிய டிப்ஸ்கள் கூறப்பட்டுள்ளன.
வீடியோவின்படி, ஒரு கப் உளுந்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். இப்போது மெதுவடை புசுபுசுனு வர ஊறவைத்த உளுந்தை பீரிசரில் வைத்து 10 நிமிடம் ஜில்லென்று மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது தண்ணீரை ஒரு டம்ளரில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உளுந்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வடிகட்டிய தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பதத்திற்கு மாவு அரைத்துக் கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
நாம் அரைத்த மாவு பக்குவமாக இருப்பதை தெரிந்துக் கொள்ள, கொஞ்சம் மாவை எடுத்து தண்ணீரில் போடுங்கள், மூழ்காமல் இருந்தால் மாவு நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
அடுத்து மாவை 5 நிமிடம் கைகளினாலே நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, முக்கால் கப் வறுத்து அரைத்த பச்சரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் அரை டேபிள் ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மாவை சரியான அளவில் சேர்ப்பது முக்கியம். அதிகம் சேர்த்தால் வடை கெட்டியாக மாறிவிடும். குறைவான அளவில் சேர்த்தால் வடை அதிக அளவில் எண்ணெய் குடிக்கும். எனவே சரியான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாவை நன்றாக கலக்கிய பின்னர், கொதிக்கின்ற எண்ணெய்யில் வடை தட்டி போட்டு 3 நிமிடத்தில் வடையை திருப்பிக் கொள்ளுங்கள். மாவு எடுக்கும்போது தண்ணீரில் நனைத்து எடுத்துக் கொண்டால் வடை ஒட்டாமல் வரும். வடையை திருப்பி திருப்பி வேக வைத்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் அருமையான மெதுவடை ரெடி. சட்னி, சாம்பார் என உங்களுக்கு ஏற்ற சைடிஷ் உடன் சாப்பிட்டு மகிழுங்கள்.