முடக்கத்தான் கீரை மூட்டு வலி, மூட்டு வீக்கத்தை குணப்படுத்த உதவும். மேலும் கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது.
இப்படி மருத்துவ குணங்கள் நிறைந்த முடக்கத்தான் கீரை துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை
உளுந்து
வர மிளகாய்
தேங்காய் துருவல்
புளி
உப்பு
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை
முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, வரமிளகாயை வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து அதை கடாயில் தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் முடக்கத்தான் கீரையை வதக்கி அதில் தேங்காய் துருவல், புளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.
அனைத்தையும் ஆறவைத்து உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்க்க வேண்டும்.
இதை சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம். இதை சாம்பார், ரசம், தயிர், வத்தக்குழம்பு மற்றும் அனைத்து வெரைட்டி ரைஸ்களுடனும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“