வெங்காயம் தக்காளி சேர்க்காமல் கும்பகோணம் ஸ்டைலில் பூண்டு காரச்சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதை இரவு நேர இட்லி, தோசைக்கு வைத்துக்கொள்ளலாம் சுவையாக இருக்கும். இந்த பூண்டு சட்னி வாயுத்தொல்லைக்கு நல்லது. வாரம் இருமுறை கூட எடுத்துக்கொள்ளலாம். இதை எப்படி செய்வது என்று உஷாஃபுட்ஸ்பாட் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்: 2 ஸ்பூன்
புளி: சிறிதளவு
வரமிளகாய்: 15
உளுத்தம் பருப்பு: 50 கிராம்
இஞ்சி: 1 இன்ச் துண்டு
பூண்டு: ஒரு கைப்பிடி
பெருங்காயம்: சிறிதளவு
கறிவேப்பிலை: ஒரு கைப்பிடி
உப்பு: தேவையான அளவு
தண்ணீர்: அரை கிளாஸ்
கடுகு: தாளிக்க
செய்முறை:
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, சிறிதளவு புளியைச் சேர்த்து நன்கு வறுக்கவும். இப்போது அதனுடன் 15 வரமிளகாயைச் சேர்த்து வறுக்கவும். பிறகு, 50 கிராம் உளுத்தம் பருப்பு, ஒரு இன்ச் இஞ்சி, ஒரு கைப்பிடி பூண்டு மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
கடைசியாக, ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைச் சேர்த்து, நன்கு ஆறவிடவும். ஆறியதும், இந்த கலவையை மிக்ஸி ஜாரில் மாற்றி, அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் மீண்டும் நல்லெண்ணெய் விட்டு, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அரைத்து வைத்த பூண்டு கலவையைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சட்னி சுருள வேகும் வரை நன்கு கிளறவும்.
சுவையான கும்பகோணம் ஸ்பெஷல் பூண்டு கார சட்னி தயார். நல்லெண்ணெய் சேர்த்து சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும். இதன் சுவை அருமையாக இருக்கும்.