நாம் தினந்தோறும் பல வகையான உணவுகளை ருசித்து வருகிறோம். அவ்வகையில், நாம் தயார் செய்யும் சாதம் என வரும் போது, அவற்றுக்கு ஏற்ற தரமான குழம்பு தேவை. அப்படியான குழம்புகள் இருந்தால் தான் அன்றைய நாள் உணவு திருப்தியாக அமையும்.
ஆனால், நாம் தயார் செய்யும் குழம்புகள் சிலவற்றை சுண்ட வைத்து, சுண்ட வைத்தும் சாப்பிடலாம். அந்த வகையில், 3 நாள் கூட வைத்து சாப்பிடும் குழம்பு எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், நாம் ருசிக்க இருக்கும் இந்த குழம்புக்கு எந்தவித காய்கறியும் தேவையே இல்லை. வெறும் வெங்காயம் மட்டும் இருந்தால் போதும். மணக்க மணக்க டேஸ்டியான குழம்பு வைத்து அசத்தி விடலாம்.
தேவையான பொருட்கள்
வறுக்க
எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - 10 பற்கள்
தேங்காய் - 1/2 மூடி
மிளகாய் - 2 டீ ஸ்பூன்
வதக்க
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
புளி - சிறிய எலுமிச்சை அளவு (புளி கரைசல்)
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு, அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
இவை ஓரளவுக்கு பொன்னிறமாக வறுபட்ட உடன் சீரகம் சேர்த்து வறுக்கவும். பிறகு அவற்றுடன் கருவேப்பிலை, தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு, அவற்றுடன் மிளகாய் பொடி சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும். இவற்றை அப்படி நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை மிக்சியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதனுடன் கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்னர், வெந்தயம், கருவேப்பிலை சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
இப்போது, ஏற்கனவே மிக்சியில் போட்டு அரைத்து வைத்த கலவையை சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் புளி கரைசல் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். இவற்றை அப்படி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
இப்படி கொதிக்க வைத்து கீழே இறக்கினால், டேஸ்டியான குழம்பு ரெடி.
3 நாள் ஆனாலும் கெட்டுப்போகாது இப்படி ஈசியாக செய்து வச்சிக்கோங்க | Simple Kulambu Recipe in Tamil #gravy #sidedish...
Posted by Todays Samayal on Tuesday, October 8, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“