காலை அல்லது இரவில் செய்த இட்லி மீந்து விட்டது என்றால் உடனடியாக இட்லி உப்புமா செய்துவிடுவோம். எவ்வளவு நாள் தான் இட்லி உப்புமா செய்துவது? என்று நீங்கள் நினைத்தால் இதற்கு மாற்றாக ஈஸியான மற்றும் சுவையான மசாலா இட்லியை ட்ரை செய்து பாருங்கள். 15 நிமிடத்தில் இதை செய்து முடிக்கலாம். குழந்தைகள் பள்ளி முடிந்து வந்து சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாக உள்ளது.
தேவையான பொருட்கள்
இட்லி - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
இட்லிப்பொடி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லிகளை போட்டி பொன்னிறமாக வறுக்கவும். பின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இட்லிகளை வறுக்கும்போது அடுப்பை மிதமான தணலில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இட்லி முறுகலாக மாறிவிடும்.
இட்லி எடுத்தவுடன் அதே கடாயில், பொடியாக நறுக்கிய பூண்டு, கடுகு, கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி
நன்றாக மசியும் வரை ஓரிரு நிமிடங்கள் விடவும்.
இதனுடன், கரம் மசாலா, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பச்சை வாடை போகும் வரை ஒரு கொதி விடவும். தொடர்ந்து, நறுக்கிய இட்லித்துண்டுகளை
சேர்த்து மசாலா முழுமையாக இறங்கும் வரை கிளறவும். இட்லிப்பொடி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து மிதமான தணலில் வைக்கவும். அவ்வளவுதான், சுவையான மசாலா இட்லி ரெடி. சூடாக பரிமாறி ருசிக்கலாம்.
மற்றொரு செய்முறை
இதில் முதலில் தாளிப்புக்கான மசாலாவை தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கவும். பிறகு கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவு தான் தாளித்த மசாலா தயார்.
இப்போது அந்த மசாலாவில், துண்டுகளாக நறுக்கிய இட்லிகளை சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து இட்லி துண்டுகளில் மசாலாவை நன்றாக படரும்படி கலக்கவும். கடைசியாக மிளகு தூள் சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் சமைக்கவும். அவ்வளவு தான், சூடான மசாலா இட்லி தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil