/indian-express-tamil/media/media_files/2025/02/16/nFw4ZjrCa2qNiWAfS3uj.jpg)
செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள முட்டை மாஸ் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
உணவுக்கு பெயர் போன ஊர் மதுரை. தூங்கா நகரம் என்றும் அழைக்கப்படும் இந்த நகரில் எந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் ருசி நாக்கில் இருக்கும். உணவுத் திருவிழா அன்றாட அரங்கேறும் நகரும் இதுதான். இங்குள்ள ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு உணவு பேமஸ்.
அந்த வகையில், மதுரையில் 'முட்டை மாஸ்' ரொம்ப பேமஸ். வீட்டில் உடனடியாக தயார் செய்யக்கூடாது உணவாகவும், சைடிஷ் ஆகவும் முட்டை மாஸ் இருக்கிறது. சாதம், இட்லி, தோசை சப்பாத்தி என எல்லா உணவுக்கும் ஏற்றதாகவும் இது உள்ளது. அவ்வகையில், செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள முட்டை மாஸ் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 15
தேங்காய் எண்ணெய் - 200 மில்லி
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 200 கிராம்
பூண்டு - 30 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 3 டீஸ்பூன்
புதினா - 1 பிடி
கருவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் முட்டையை தண்ணீரில் போட்டு அவித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் ஓடுகளை உடைத்து தனியாக எடுத்து வைக்கவும். முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான உடன் சீரகம், சோம்பு போட்டு பொரிய விடவும். பின்னர், அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும். நன்கு வெங்காயத்தை வதக்கி விட்ட பிறகு, பச்சைமிளகாய் இடித்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி பாதியளவு வதக்கி பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடத்துக்கு வதக்கவும்.
இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். சீரகத்தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். இப்போது கிரேவி ரெடி.
இதன்பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கல் சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதன்பிறகு, ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள கிரேவியை சேர்க்கவும்.
பிறகு அதனுடன், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். பின்னர் வெட்டி வைத்துள்ள முட்டையை சேர்க்கவும். இதனை நன்றாக கரண்டியால் கலந்து விட்டு எடுத்தால் முட்டை மாஸ் ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.