ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட உணவு பொருள் மிகவும் பிரபலமாக இருக்கும். அந்த வகையில் மதுரையில் ஃபேமஸான பருத்திப் பாலை, எவ்வாறு வீட்டில் செய்யலாம் என்று இந்த சமையல் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
பருத்தி விதை,
தண்ணீர்,
வெல்லம்,
பச்சரிசி,
சுக்கு,
ஏலக்காய்,
மிளகு,
திப்பிலி மற்றும்
தேங்காய்
செய்முறை:
மூன்று கைப்பிடி அளவிற்கு பருத்தி விதைகளை சுமார் மூன்று முறை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பின்னர், இந்த பருத்தி விதைகள் அனைத்தும் மூழ்கும் அளவிற்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சுமார் 8 மணி நேரத்திற்கு இவை தண்ணீரில் ஊற வேண்டும்.
இதையடுத்து, ஊறிய பருத்தி விதைகளை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதன் பின்னர், அரைத்து எடுத்த பருத்தி விதைகளை காட்டன் துணியில் வடிகட்டி பால் எடுக்க வேண்டும். இதேபோல், மூன்று முறை பால் எடுக்க வேண்டும்.
இதனிடையே, ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து, அத்துடன் 500 கிராம் வெல்லம் சேர்த்து பாகு பதத்திற்கு காய்க்க வேண்டும். இப்போது, பருத்திப் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
இனி 200 கிராம் பச்சரிசியை சுமார் மூன்று மணி நேரம் ஊற வைத்து அதன் பின்னர் மிக்ஸியில் பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இந்த அரிசிக் கலவையை, கொதிக்கும் பருத்திப் பாலுடன் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு ஊற்றிய பின்னர் பருத்திப் பாலை கிளறி விட வேண்டும். சுமார் 3 நிமிடங்களுக்கு பின்னர் காய்த்து வைத்த வெல்லபாகுவையும் இத்துடன் சேர்த்து கலக்க வேண்டும். இறுதியாக சுக்கு, ஏலக்காய், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடியாக அரைத்து அரை ஸ்பூன் அளவிற்கு பருத்திப் பாலுடன் சேர்க்கலாம்.
இதற்கடுத்து கொதிக்கும் பருத்திப் பாலுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான மதுரை ஃபேமஸ் பருத்திப் பால் தயாராகி விடும்.