சர்க்கரைப் பொங்கல் என்னதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் கோயிலில் செய்கிற சர்க்கரைப் பொங்கல் போல வரவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள். செஃப் தீனா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் செய்யும் கிருஷ்ணன் எப்படி செய்கிறார் என்று யூடியூப் சேனலில் வீடியோ போட்டுள்ளார்.
அதை உங்களுக்காக இங்கே தருகிறோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்க்கரை பொங்கலை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். இந்த வருஷம் பொங்கல் பண்டிகைக்கு இதை ட்ரை பண்ணி பாருங்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 350 கிராம்
வெல்லம் - 1050 கிராம்
நெய் - 450 மில்லி
முந்திரி பருப்பு - 200 கிராம்
உலர் திராட்சை - 100 கிராம்
ஏலக்காய் - 25 கிராம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்க்கரை பொங்கல் செய்முறை:
பச்சரிசியை ஊற வைக்க வேண்டாம், பச்சரிசியை கழுவி ஒரு கப் பச்சரிசிக்கு 3 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் பச்சரிசி போடுங்கள். பச்சரி வெந்த பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு, பச்சரிசி சாதத்தை நன்றாக மசித்துவிடுங்கள்.
இப்போது பொடித்த தூள் வெல்லத்தைப் போட்டு நன்றாகக் கிளறிவிட்டுக்கொண்டே இருங்கள். சாதமும் வெல்லமும் கரைந்து கலக்கும் வரை கிளறிவிடுங்கள். மேலே ஆடை வரும் வரை கிளறி விடுங்கள். இப்போது இதை இறக்கி வைத்துவிடுங்கள்.
அடுத்து இன்னொரு பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்வில் வைத்து, அதில் நெய் ஊற்றுங்கள். நெய் காய்ந்த உடன் அதில் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து அதை எடுத்து அப்படியே சாதத்தில் போட்டு நன்றாகக் கிளறிவிடுங்கள். அதற்கு பிறகு, ஏலக்காய் தூள் போட்டு கலந்துவிடுங்கள். அவ்வளவுதான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சர்க்கரை பொங்கல் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“