இந்தியாவில் இட்லி சட்னி, சாம்பார் என்பது தமிழர்களின் உணவாகப் பார்க்கப்படுகிறது. இட்லி சுமார் 600 ஆண்டுகளாகத்தான் தமிழர்கள் இட்லியை உணவாக சாப்பிட்டு வருவதாகக் கூறுகிறார்கள். பொதுவாக அவித்த உணவுகள் உடலுக்கு நல்லது. காலை உணவான இட்லியும் அப்படித்தான். இட்லி அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருக்கிறது. இன்றைக்கு இட்லி தென்னிந்தியர்களின் விருப்பமான உணவாக இருக்கிறது.
சிலருக்கு இட்லி என்றாலே பிடிக்காது. அதற்கு காரணம், அவர்கள் காலையில், ஆவி பறக்கும் மல்லிப்பூ இட்லி, 5 வகை சட்னி, கமகம என மணக்கும் சாம்பார் சாப்பிட்டு அறியாதவர் என்றே சொல்லலாம். சட்னி, சாம்பார் நன்றாக சுவையாக செய்தாலும் பலருக்கும் மல்லிப்பூ இட்லி செய்வது கைவராத கலையாகவே இருக்கும். அவர்களுக்காக, மல்லிப்பூ போல மிருதுவான இட்லி செய்வது எப்படி என்று இங்கே கூறுகிறோம்.
மல்லிப்பூ இட்லி செய்வதற்கு வேண்டிய பொருட்கள்
தோல் நீக்கப்பட்ட முழு உளுந்து – 1 கப் இட்லி அரிசி – 4 கப் உப்பு – 3 டீ ஸ்பூன், தேவைப்பட்டால் வெந்தயம் -1/2 டீ ஸ்பூன். இந்த அளவு மாவு அரைத்தால் 2 பேர் சாப்பிடலாம்.
செய்முறை
மல்லிப்பூ போல இட்லி செய்வதற்கு முதலில் இட்லி மாவை செய்வதற்கு அரிசியையையும், உளுந்தையும் 3 மணி நேரத்திற்கு தனித்தனி பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை முதலில் கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும்போது, உளுத்தம் பருப்பு ஊற வைத்த தண்ணீரைக் சிறிது சிறிதாக விட்டு நன்றாக மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவை வழித்து எடுத்துவிட்டு, ஊறவைக்கப்பட்ட அரிசியை கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு நன்கு மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும். பின்பு இந்த அரிசி மாவு கலவையையும், உளுந்து வெந்தயம் மாவு கலவையையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். பின்பு அப்பாத்திரத்தை மூடி ஒரு குளுமையான இடத்தில் குறைந்தது 8 மணி நேரத்திற்கு புளிக்க விட வேண்டும்.
8 மணி நேரத்திற்குப் பிறகு, மாவு கலவையை பார்க்கும் போது அதில் நுரைகள் அதிகம் காணப்படும். இது மாவு சரியான பதத்தில் இருப்பதை காட்டுகிறது.
இப்போது இட்லி அவிக்கும் குண்டானில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். இட்லி தட்டில் சுத்தமான பருத்தியால் ஆன வெள்ளை துணியை நன்கு பரப்பி, அதில் இட்லி மாவை ஊற்றி நன்றாக மூடி அவிக்க வேண்டும்.
அதிகபட்சம் 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை இட்லிகளை வேக வைத்து எடுத்தால் மல்லிப்பூ போன்ற மிருதுவான இட்லி தயார். அதிக நேரம் அளவுக்குமேல் இட்லிகளை வேக வைப்பதால் இட்லிகள் மிகவும் இறுகிவிடக்கூடும்.
இப்போது, உங்கள் வீட்டு டிவியில் ‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே’ பாடலைப் பார்த்துக்கொண்டே மல்லிப்பூ போன்ற மிருதுவான இட்லியை 5 வகை சட்னி சாம்பாருடன் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் சுவையால் பிறந்த பலனை அடைவீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"