மரவள்ளிக்கிழங்கு பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளாகும். மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. தினசரி வேலைகளுக்குத் தேவையான சக்தியை இது தருகிறது.
அதுமட்டுமின்றி நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. மேலும், குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் உள்ள அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் இரத்த சோகையைக் கட்டுப்படுத்தவும் அதே நேரத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கின்றன. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
உடல் எடை அதிகரிக்க விரும்புவோருக்கு மரவள்ளிக்கிழங்கு ஒரு நல்ல உணவாகும், ஏனெனில் இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இவ்வளவு நன்மைகள் கொண்ட மரவள்ளிக்கிழங்கில் எப்படி போண்டா செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
கடலை மாவு - ¼ கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
சோம்பு - ½ டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில், மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, தோல் உரிக்காமல் ஒரு குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும். கிழங்கு நன்கு வெந்து மென்மையாகும். கிழங்கு வெந்ததும், தண்ணீரை வடித்துவிட்டு, ஆறவிடவும். ஆறியதும் தோலை உரித்து, கட்டிகள் இல்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் மசித்த மரவள்ளிக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோம்பு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
இப்போது, கடலை மாவு மற்றும் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஈரப்பதமே மாவை பிசைய போதுமானதாக இருக்கும். தேவைப்பட்டால், மிகக் குறைவாக தண்ணீர் தெளிக்கலாம், ஆனால் மாவு போண்டா தட்டக்கூடிய பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும். பிசைந்து வைத்த மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து சூடான எண்ணெயில் போடவும். ஒரே நேரத்தில் நிறைய போண்டாக்களை போடாமல், போண்டாக்கள் நன்கு வேகும் அளவுக்கு மட்டும் போடவும்.
போண்டாக்கள் இரண்டு பக்கமும் பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்து எடுக்கவும். எண்ணெயில் இருந்து எடுத்ததும், கூடுதல் எண்ணெயை உறிஞ்சுவதற்காக டிஷ்யூ பேப்பரில் போடவும். அவ்வளவுதான் போண்டா ரெடியாகிவிட்டது. இதனை சட்னியோடு சேர்த்து சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும்.