/indian-express-tamil/media/media_files/2025/01/31/UxzIVSffVFHQd7zDSXmd.jpg)
பெரிஃபரல் நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, அந்த பெரிஃபரல் நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், இந்த பிரச்னை பின்னாளில் ஒரு பெரிய நோயாக உருவெடுக்காது.” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
கால் பாதம் எரிச்சல் சுகர், பிபி இருக்கும் நபர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக உள்ளது. அதனால், இந்த பிரச்னைக்கான காரணம் என்ன என்று தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் இந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இது குறித்து மருத்துவர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் சேனலில் கூறியுள்ளதை அப்படியே இங்கே தருகிறோம்.
மருத்துவர் சிவராமன் கூறுகையில், “உள்ளங்கையில், உள்ளங்காலில் வரக்கூடிய சின்ன எரிச்சல், நிறைய பேருக்கு இளம் வயதில் வரவே வராது. பெரும்பாலும் இந்த பிரச்சனை 45 வயதுக்கு மேல் 55 வயதுக்கு மேல் இந்த பிரச்சனை சின்ன சின்னதாக அங்கங்க வரும்.ஒரு சிலர் சொல்வார்கள் எனக்கு உள்ளங்கையில் மட்டும் நடுப்பகுதியில் ஒரு சின்ன காந்தல் உணர்வு இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு சிலர் எனக்கு கால் பெருவிரல் மட்டும் எரிச்சலாக இருக்கிறது என்று சொல்வார்கள். இன்னும் சிலர் காலில் செருப்பு போட்டு இருக்கிறேனா என்பது தெரியவில்லை என்று சொல்வார்கள். காலில் செருப்பை பிடித்து இருக்கிற உணர்வு இல்லை என்று சொல்வார்கள். இந்து பிரச்னை எல்லாமே எதைச் சொல்கிறது என்றால் கால் கைப்பகுதியில் இருக்கக்கூடிய புற நரம்புகள் அவற்றினுடைய வலு இழப்பை தான் சொல்கின்றன. ஆங்கிலத்தில் பெரிஃபரல் நியூரைட்டீஸ் என்று சொல்வார்கள். உடம்பினுடைய கடைசி முடிவு பகுதிகளான உள்ளங்கை பகுதிகள், உள்ளங்கால் பகுதிகளில் நரம்புகள் மூலையில் இருந்தும் நம்முடைய தண்டுவடத்தில் இருந்தும் தொடங்கி வந்து இந்த பகுதிகளில் மிக நுண்ணிய இழைகள் மாதிரி இந்த நரம்புகள் முடிகின்றன. அதனால்தான் நாம் சூடாக இருக்கிறதா குளிர்ச்சியா இருக்கிறதா, கரடு முரடா இருக்கிறதா, மென்மையாக இருக்கிறதா என்கிற பல்வேறு உணர்வுகளை உணர்ந்து நம் உடம்புக்கு அறிவிப்பது அவை தான்.
பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளுக்குதானந்த பெரிஃபரல் நியூரைட்டீஸ் என்கிற பிரச்னை வரும். நாள்பட்ட சர்க்கரை நோயாளிகள் எப்போதுமே கால்களில் மெண்மையான செருப்பு அணிவதை உறுதியாக செய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகள் வெயிலில் சூடான இடங்களில் நடப்பது, முட்கள் குத்தக்கூடிய கரடு முரடான இடங்களில் நடந்தால் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒருவர்க்கு பெரிஃபரல் நியூரைட்டீஸ்தான் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்றால், இன்றைக்கு பெரிஃபரல் நரம்புகள் எப்படி செயல்படுகிறது என்பதைக் கணிப்பதற்கு ஒரு நுண்ணிய கம்ப்யூட்டர் டெஸ்ட் எல்லாம் வந்துவிட்டது. இன்றைக்கு கால்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு மருத்துவ அறிவியல் விரிந்து உலக அளவில் அதில் பணியாற்றக்கூடிய பல மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
சர்க்கரை நோயில் கால்களை பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. அதில் மிக முக்கியமான காரணம் பெரிஃபரல் நரம்புகள் பாதிப்படைந்து, திசுக்கள் சேதமடைந்து சில நேரங்களில் கால் விரல்களை எடுக்க வேண்டிய சூழல் வருகிறது. கணுக்காலுக்கு கீழேயே காலை எடுக்க வேண்டிய சூழல் வருகிறது. இது எல்லாமே இந்த பெரிஃபரல் நரம்புகள் சேதமடையும் பிரச்னையால் ஏற்படுகிறது.
இந்த பிரச்னை சர்க்கரை நோய் இல்லாமல் வேறு என்ன பிரச்னைகளால் வரும் என்று பார்த்தீர்கள் என்றால், ரத்தக் கொதிப்பு நோய்களில்கூட இந்த பெரிஃபரல் நோய் பிரச்னை வரும். ரத்தக் கொதிப்பு கட்டுப்பாடமல் இருந்தால், பெரிஃபரல் பகுதிகளில் கை, கால் பகுதிகளில், முகப் பகுதிகளில் இது போன்ற புற பகுதிகளில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்காது. பெரிஃபரல் வெஸ்ஸல் பாதிப்படையும். நரம்புகள் செயலிழப்பு ஏற்பட்டு, அதனாலும் இந்த பெரிஃபரல் நியூரைட்டீஸ் வர வாய்ப்பு உண்டு. அதனால், ஒருவருக்கு கை, கால் எரிச்சல் இருக்கிறது என்றால் சர்க்கரை அளவு மட்டும் பார்க்கக்கூடாது. ரத்தக் கொதிப்பு அளவு எப்படி இருக்கிறது என்கிற அளவையும் பார்த்து, ஒருவேளை கூடுதாலக இருந்தால் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிலருக்கு சர்க்கரை நோயும் இல்லை, ரத்தக் கொதிப்பும் இல்லை, ஆனால், கை, கால்களில் பாதத்தில் எரிச்சல் இருக்கிறது என்றால், விட்டமின் பி12 பற்றாக்குறைகூட ஒரு முக்கியமான காரணமாக இருக்கும். இந்த பி12 சத்து சைவ உணவு உண்பவர்களுக்கு நேரடியாக கிடைக்காது. காய்கறிகளில் மற்ற கனிமங்கள், உயிர்ச்சத்துகள் நிறைய இருக்கிறது. ஆனால், பி12 சத்து காய்கறிகளில் இருந்து நிறைய கிடைப்பதில்லை என்று இன்றைக்கு நவீன அறிவியல் சொல்கிறது.
பெரும்பாளும் இந்த பி12 சத்து நிறைய நிறைந்திருப்பது, சிக்கன் ஈரல், இறைச்சி உணவுகளில்தான், அதிக அளவில் இருக்கிறது. அதனால், ஒரு சைவ உணவு உண்பவருக்கு சர்க்கரை இல்லை, ரத்தக் கொதிப்பு இல்லை, இந்த கை, கால் எரிச்சல் இருக்கிறது என்றால், அவருக்கு இந்த பி12 சத்து பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். பி12 சத்து எவ்வளவு இருக்கிறது என்று அளவிட்டுப் பார்க்கக்கூடிய சோதனைகள் இருக்கிறது. அதன் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். சோதனையில் பி12 சத்து குறைவாக இருப்பது தெரிந்தால் அந்த ஒரு சத்தை கொடுத்தால் அவர்களுக்கு பெரிஃபரல் நரம்பு பிரச்னை சரியாகிவிடும்.
அதே போல, நம்முடைய இடுப்பில் இருந்து காலுக்கு வரக்கூடிய ரத்த நாளங்களில் ஏதாவது அடைப்பு இருந்தால் அதனாலும் பாதத்தில் ரத்த ஓட்டம் குறைந்திருக்கும். நின்று கொண்டே பணியாற்றுபவர்களுக்கு வேரிகோசிட்டிஸ் இருக்கும். அதிலும் அடுத்தகட்டமாக பெரிஃபரல் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதே போல, ரொம்ப புகை பிடிக்கிற பழக்கம் இருக்கும் நபருக்கு காலுக்கு கீழே வருகிற ரத்த ஓட்டம் குறைந்து, டி.ஏ.ஓ நோயால், கால்களில் எரிச்சலும் கருமை நிறமும் வரத் தொடங்கும். ரொம்ப நாள் ஆனால், கால்கள் முழுவதும் கருத்துப்போய், அந்த நேரத்தில் நரம்புகள் செயலிழந்து, அதனால் தீவிர வலி உண்டாகும். புகை பிடிப்பதனால், காலை யே இழக்க வேண்டிய சூழல் சில பேருக்கு வரும். அதனால்தான், ஒன்று சிகரெட்டை விடுங்கள், இல்லை காலை விடுங்கள் என்ற ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
அதனால், இந்த பெரிஃபரல் பிரச்னை எதனால் வருகிறது என்று காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். குடும்ப மருத்துவரைப் பார்த்து, சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா, உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா, இல்லை ரத்த நாளங்களில் தொந்தரவு இருக்கிறதா என்பதைத் தெரிந்து அதற்குரிய சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்வது முதல்படி.
சிகிச்சை ஒருபக்கம் என்றால், இந்த எரிச்சல் வராமல் இருக்க வேறு என்ன செய்ய முடியும் என்றால், சில பக்குவங்கள் இந்த பெரிஃபரல் நியூரைட்டீஸ் பிரச்னை வராமல் தடுக்கிறது என்று சொல்கிறார்கள். அதில், ஒன்று மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி விதை. இந்த மணத்தக்காளி வற்றலை நல்லெண்ணெயில் வறுத்துவிட்டு, சுடுசோறில் போட்டு சாப்பிட்டால், அது இந்த புற நரம்புகளை வலுப்படுத்தும். மணத்தக்காளி கீரையை தேங்காய் பால், சிறுபருப்பு போட்டு குழம்பு போல எடுத்துக்கொள்ளலாம். பொதுவாகவே கீரைகளை நிறைய எடுத்துக்கொள்வது நரம்புகளை வலுப்படுத்த வைக்கும். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை எல்லாமே நரம்புகளை வலுப்படுத்தக் கூடிய தன்மை உள்ளது. அதனால், அந்தக் கீரைகளை ஏதாவது ஒருவகையில் உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல, கிராம்புவில் அமுக்கரா கிழங்குகள் போட்டு ஒரு சூரணம் செய்வார்கள். சித்த மருத்துவர்கள் இப்படி ஒரு பொடி செய்வார்கள். இந்த கிராம்பு சூரணம், கரபாதசூளை என்று சொல்லக்கூடிய பெரிஃபரல் நரம்பு பிரச்னையை நீக்கி எரிச்சல் வரத் தன்மையைப் போக்கும் என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அதனால், பெரிஃபரல் நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, அந்த பெரிஃபரல் நரம்ப்களை வலுப்படுத்தக்கூடிய இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், இந்த பிரச்னை பின்னாளில் ஒரு பெரிய நோயாக உருவெடுக்காது.” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.