scorecardresearch

வீட்டுல ஃப்ரெஷ் இட்லி மாவு இருக்கா? 10 நிமிடத்தில் மெதுவடை ரெடி!

மெதுவடை சுடுவதற்கு தனியாக உளுந்து மாவு அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் ஃபிரெஷ் இட்லி மாவு இருந்தால் போதும் 10 நிமிடத்தில் மெதுவடை ரெடி. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

வீட்டுல ஃப்ரெஷ் இட்லி மாவு இருக்கா? 10 நிமிடத்தில் மெதுவடை ரெடி!

நிறைய பேருக்கு கடலை வடையைவிட மெதுவடைதான் மிகவும் பிடிக்கும். ஆனால், மெதுவடை செய்வதற்கு உளுந்து பருப்பு ஊற வைத்து தனியாக மாவு அரைத்து வடை சுட வேண்டும், நிறைய வேலை வாங்கும் என்று தவிர்த்து விடுவார்கள். ஆனால், மெதுவடை சுடுவதற்கு தனியாக உளுந்து அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் ஃபிரெஷ் இட்லி மாவு இருந்தால் போதும் 10 நிமிடத்தில் மெதுவடை ரெடி. இட்லிக்கு மாவு அரைக்கும் போது, தோசை மாவு அரைக்கும்போது அதே மாவில், நாம் மிகவும் சுவையான மெதுவடை செய்யலாம்.

இட்லி, தோசை மாவு கொஞ்சம் தண்ணியாக இருக்கும். அதனால், மெதுவடை சுட்டால், எண்ணெய் குடிக்காதா என்ற கேள்வி எழலாம். உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்.

உங்கள் வீட்டில் 1 கப் தோசை மாவு இருந்தாலும் சரி, 1 கப் இட்லி மாவு இருந்தாலும் சரி, அதை வைத்து மெதுவடை செய்வது எப்படி என்று உங்களுக்காக இங்கே ஒரு எளிமையான குறிப்பு தருகிறோம்.

மாவு தண்ணீராக இருக்கிறது என்று கவலைப் பட வேண்டாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அதில் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவு அல்லது தோசை மாவு ஏதாவது ஒன்றை ஊற்றிக் கொள்ள வேண்டும். (ஒரு சின்ன கப் மாவு எடுத்து முயற்சி செய்து பாருங்கள்.) மாவில் உப்பு போட்டு இருந்தால் இந்த இடத்தில் உப்பு சேர்க்க வேண்டாம் அல்லது உப்பு குறைவாக இருக்கும் என்று நினைத்தால் தேவையான அளவு உப்புத்தூள், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 10, இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கியது இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு கரண்டியை வைத்து இந்த மாவை மூன்று நிமிடம் போல கலந்து விட்டால் மாவு கொஞ்சம் கெட்டிபிடிக்க தொடங்கி விடும்.

மாவு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். மாவு நன்றாக சூடு ஆறிய பின்பு இதில் பொடியாக நறுக்கிய கருவேப்ப்லை கொத்தமல்லி தழைகளை, சேர்த்து தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, மாவை பிசையுங்கள்.

இப்போது மெதுவடை சுடுவதற்கு தேவையான பக்குவமான மாவு கிடைத்துவிடும். இந்த மாவை தேவையான அளவில் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வடை போல தட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு படுத்துங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, ஒவ்வொரு வடையாக போட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான மெதுவடை தயார்.

அதே நேரத்தில் வடை தட்டும்போது ரொம்பவும் தடிமனாக தட்ட வேண்டாம். ரொம்ப தடிமனாக இருந்தால் உள்ளே வேகாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக மிதமான தீயில் தான் மெதுவடை சுட வேண்டும்.

மெதுவடை மட்டுமல்ல, உங்களுக்கு போண்டா தேவை என்றால், குட்டி குட்டி போண்டா செய்யலாம். அதற்கு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம். இந்த மெதுவடைக்கு தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியை பரிமாறலாம். இந்த மெதுவடை டீ காபி குடிக்கும் போது சூப்பரான ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.

பின்குறிப்பு: இந்த மெதுவடையை புதுசாக அரைத்த புளிக்காத இட்லி தோசை மாவில் இதை செய்யலாம். அல்லது ஒரே ஒரு நாள் புளித்த மாவில் செய்யலாம். மாவு ரொம்பவும் புளித்த பிறகு இந்த வடை செய்தால், லேசாக புளிப்பு தெரியும். அதேபோல நிறைய வெந்தயம் சேர்த்து இட்லி தோசை மாவு அரைப்பவர்களாக இருந்தால் லேசாக கசப்பு தெரியும். ஒரு ஸ்பூன் அளவு வெந்தயம் போட்டு இட்லி மாவு அரைத்து எடுத்தால் கசப்பு தெரியாது. சில பேர் தோசை நிறைய சிவக்க வேண்டும் என்பதற்காக நிறைய வெந்தயம் சேர்த்து விடுவார்கள். இதனால், சுவை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், பக்குவமாக இட்லி தோசை மாவிலேயே மெதுவடை, குட்டி குட்டி போண்டா செய்து சாப்பிடலாம். நீங்கள் கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Medu vada doing in idli flour and dosa flour within in 10 minutes