நாம் வழக்கமாக பிரியாணி என்றாலே, அட சூப்பர் ஒரு புடி புடிக்கலாம் என்று நினைப்போம். ஆனால் வழக்கமான பிரியாணியை நம்மால் எப்போதுமே சாப்பிட முடியாது. அதில் ஊட்டச்சத்து ஏதுவும் இல்லை. காய்கறிகளை வைத்து பிரியாணி செய்தாலும், அதை பலர் விரும்புவதில்லை. இந்நிலையில் ஆரோக்கியமும் அதேவேளையில் சுவை நிறைந்த சிறுதானிய பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். வழக்கமான அரிசிக்கு பதிலாக, திணை எடுத்துகொள்ளுங்கள் உங்களுக்கு வேண்டுமானால் குதிரைவாலி, வரகு, சாமை போன்ற சிறுதானிய வகைகளிலும் இதே ரெசிபியை செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்.
எண்ணெய் -1 ஸ்பூன், பிரிஞ்சி இலை -1, ஏலக்காய் – 3, பட்டை – சிறிய துண்டு, முந்திரிப்பருப்பு – 2, லவங்கம் – 3, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1
திணை அரிசி -1 டம்ளர், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு
மல்லி தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் , பச்சை பட்டாணி -1/4 கப், கொத்தமல்லி – ஒரு கொத்து, புதினா –ஒரு கொத்து
செய்முறை
திணையை நன்கு கழுவி, தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். தற்போது அடுப்பை மூட்டி,ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை. கிராம்பு, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்கவும். மேலும் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதைத்தொடர்ந்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்து கேரட், பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து வதக்கியதும் தக்களியையும் சேர்த்துகொள்ளவும்.
தொடர்ந்து மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து மெதுவாக கிளரவும். தற்போது மசாலவுடன் காய்கறி சேர்த்து நன்றாக வதங்கிய பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும்போது , ஊறிய சிறுதானியத்தை சேர்க்கவும். தொடர்ந்து குக்கரை மூடிவிட்டு 2 அல்லது 3 விசில் விட்டு எடுத்தால் சுவையான சிறுதானிய பிரியாணி ரெடி.