சிறுதானிய உணவு பற்றி விழிப்புணர்வு வேண்டும்: ஆட்சியர் குலோத்துங்கன்
சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மட்டுமல்லாமல் பொதுமக்கள் சிறு தானிய உணவுகளை அதிக அளவு உட்கொள்ளும் வகையில் மக்கள் மத்தியில் அதன் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும் - காரைக்கால் ஆட்சியர் குலோத்துங்கன்
காரைக்காலில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானிய உற்பத்தி பற்றிய ஒரு நாள் பயிற்சி பணிமனை காரைக்கால் மாவட்ட வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இன்று (17.04.2023) நடைபெற்றது.
Advertisment
உளவியல் துறை பேராசிரியர் முனைவர் அழ. நாராயணன் வரவேற்புரை ஆற்றினார்கள். ஒரு நாள் பயிற்சி பணிமனையை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. குலோத்துங்கன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குலோத்துங்கன், சிறுதானியங்களால் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்துதல் மட்டுமல்லாமல் பொதுமக்கள் சிறு தானிய உணவுகளை அதிக அளவு உட்கொள்ளும் வகையில் மக்கள் மத்தியில் அதன் அவசியத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
உலக அளவில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. 2030-ம் ஆண்டை ஐ.நா சபையில் சிறுதானிய ஆண்டாக அறிவிக்க இந்தியா விடுத்த கோரிக்கையை 72 நாடுகள் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. கல்லூரி முதல்வர் முனைவர். ஆ. புஷ்பராஜ் இந்த பணிமனையின் நோக்கத்தையினையும் சிறுதானிய பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதலின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கூடுதல் வேளாண் இயக்குனர் ஜெ. செந்தில்குமார் பேசுகையில், காரைக்காலில் நெல்லுக்கு மாற்றுப் பயிராக சிறுதானிய பயிர்கள் பயிரிடுவதில் உள்ள இடர்பாடுகளையும் அவற்றை நிவர்த்தி செய்து சிறு தானிய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களின் அவசியத்தையும் பற்றி விளக்கினார்.
இந்த பயிற்சி பணிமனையில் சிறு தானியங்களின் முக்கியத்துவம், சிறுதானிய உணவுகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகிய தொழில்நுட்ப உரைகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கினர். நிகழ்ச்சி கடைசியில் வேளாண் பொருளியல் மற்றும் விரிவாக்கத் துறை தலைவர் முனைவர். என். சுவாமிநாதன் நன்றி உரையாற்றினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“