MK Stalin’s Liking for Buttermilk: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்கிறார். கட்சிப் பணிகளையும் கவனிக்கிறார். மாநில அரசின் நிர்வாகத்திற்காக கடுமையாக உழைக்கிறார். 71 வயதிலும் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல் ஆரோக்கியத்தை மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொள்பவர் அவரது மனைவி துர்கா ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரோக்கியமாக இருக்க அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், ஸ்டாலினுக்கு ஆரோக்கியமான உணவுகளை செய்துகொடுக்கிறார். ஸ்டாலினுக்கு நெல்லிக்காய் மோர் பானம் பிடிக்கும் என்று துர்கா ஸ்டாலின் கூறுகிறார். இதைப் படித்ததும் பலரும் இந்த நெல்லிக்காய் மோரை, துர்கா ஸ்டாலின் எப்படி செய்கிறார் என்று கேட்கலாம். அதனால், இந்த நெல்லிக்காய் மோர் எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
நெல்லிக்காய் மிகவும் எளிதாகக் கிடைக்கும் என்றாலும், சீசன் இல்லாத சமயங்களில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், ஃபிரஷ்ஷாகக் கிடைக்குமா என்பது ஐயம்தான். அதனால், நெல்லிக்காய் ஃபிரஷ்ஷாக் கிடைக்கும்போது வாங்கி சுத்தம் செய்து வெந்நீரில் சிறிது உப்பு போட்டு, அதில் நெல்லிக்காய்களையும் ஊற போட்டு ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்கிறார் துர்கா ஸ்டாலின்.
அப்படி ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்திருக்கும் நெல்லிக்காயில் புளிப்பு அதிகமாகாமல் இருக்க ஓரிரு முழு பச்சை மிளகாயை போட்டு வைத்துக் கொள்ளலாம். கேரளாவில் இந்த ஊறவைத்த நெல்லிக்காய் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டீ, காபி குடிப்பதை அதிகம் விரும்பாதவர். அரிதாக டீ குடிப்பார். அதிலும் சர்க்கரை இல்லாத கருப்பு காபி, கிரீன் டீதான். ஆனால், இந்த நெல்லிக்காய் மோர் பானட்த்தைக் கண்டிப்பாக குடித்துவிடுவாராம். வெயில் காலம் என்றால் தினமும் நெல்லிக்காய் மோர் பானம் குடிப்பாரம். வெளி மாவட்டங்களுக்கு சென்றாலும் துர்கா ஸ்டாலின் இந்த நெல்லிக்காய் மோர் செய்து கொடுத்து அனுப்புவாராம்.
இந்த அளவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காய் மோர் செய்வது ரொம்ப ஈஸிதான்.
நெல்லிக்காய் மோர் செய்ய தேவையான பொருள்கள்
நெல்லிக்காய் - 2,
தயிர் - 4 ஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 கொத்து,
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி,
பச்சை மிளகாய் - அரை,
சீரகம் - கால் ஸ்பூன், மிளகு - 4,
இந்துப்பு - 2 சிட்டிகை,
நெல்லிக்காய் மோர் செய்முறை
நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸியில் போட்டு, அதனுடன் தயிர், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் 2-3 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கலக்கிக்கொள்ளுங்கள். பின்னர் அதை, வடிகட்டினால், நெல்லிக்காய் மோர் தயார்.
இந்த நெல்லிக்காய் மோர் குடிப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். செரிமான ஆற்றலை மேம்படுத்தும். நெல்லிக்காய் மோரில் வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்து இருக்கின்றன. இதை தினமும் குடிப்பதால், சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி டீடாக்ஸ் செய்கிறது. முக்கியமாக இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது இந்த நெல்லிக்காய் மோர். இது கல்லீரல் தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது. ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்னைகளையும் சரி செய்கிறது.