பேரீச்சம் பழத்திற்கு சமமாக முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைக் கீரையக் கொண்டு சுவையான ரசம் செய்வது எப்படி என செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த கீரையை கொண்டு சுமார் 50 உணவுகள் தயாரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். இத்துடன் 10 அல்லது 12 காய்ந்த மிளகாய்கள், ஒரு கைப்பிடி அளவிற்கு மிளகு இரண்டையும் சேர்க்க வேண்டும். இந்த மிளகு வெடித்த பின்னர், அதே அளவிற்கு சீரகம் சேர்க்க வேண்டும். பின்னர், இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதையடுத்து, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். இந்தப் பொடியை மிக்ஸி ஜாரில் போட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும்.
இதனிடையே, 100 கிராம் துவரம் பருப்பை 3 தக்காளி சேர்த்து 500 மி.லீ தண்ணீருடன் குக்கரில் 4 விசில் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். மேலும், கொதிக்கும் தண்ணீரில் முருங்கைக் கீரையை போட்டு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்க வேண்டும். இந்த தண்ணீர் மீண்டும் ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, முருங்கைக் கீரையை வடிகட்டி மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, 4 காய்ந்த மிளகாய்கள், ஒரு டீஸ்பூன் கடுகு, தோலுடன் இடித்த 10 பல் பூண்டு, ஒரு கொத்து கறிவேப்பிலை, மூன்று பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். இதன் நிறம் மாறி வரும் போது, வேகவைத்திருந்த பருப்பு, தக்காளி கரைசலை இதில் சேர்க்க வேண்டும். இத்துடன் 50 கிராம் புளியை, 100 மி.லீ தண்ணீரில் கரைத்து, இதில் ஊற்ற வேண்டும்.
இது வேகும் போது அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, அரை ஸ்பூன் கருப்பட்டி சேர்த்து வேகவைக்க வேண்டும். 5 நிமிடங்கள் இவை வெந்ததும், முதலில் அரைத்து வைத்திருந்த மசாலாவை 2 ஸ்பூன் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்த பின்னர், 1 லிட்டர் தண்ணீரை இதில் ஊற்ற வேண்டும்.
இவை கொதிக்கும் போது அரைத்து வைத்திருந்த முருங்கைக் கீரையை இதில் சேர்க்கலாம். பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான முருங்கைக் கீரை ரசம் தயாராகி விடும்.