காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான உணவு. பரபரப்பான காலையில் சமைப்பதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு, அரிசி, உளுந்து ஊற வைக்காமல், மாவு புளிக்க வைக்காமல் சட்டுன்னு செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக பாசிப்பயறு ரவா இட்லி உள்ளது. இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று ரிஷிகாஹெரால்ட் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1 கப்
ரவை - 1 கப்
தண்ணீர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் சோடா - கால் ஸ்பூன்
துருவிய கேரட் - சிறிதளவு
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு
தயிர் - 1 கப்
நெய் அல்லது எண்ணெய்
செய்முறை:
முதலில், ஒரு கப் பாசிப்பயறை நன்கு கழுவி, மிக்ஸியில் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக அரைத்து எடுக்கவும். அரைத்த பாசிப்பயறு கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். இப்போது, ஒரு கப் ரவை, தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் பேக்கிங் சோடா, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கப் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை அரை மணி நேரம் அப்படியே விடவும்.
இட்லி தட்டுகளில் நெய் அல்லது எண்ணெய் தடவி, நீங்கள் வழக்கமாக இட்லி ஊற்றுவது போலவே மாவை ஊற்றவும். பின்னர், வழக்கமாக இட்லி வேக வைக்கும் அதே நேரத்தில் வேக வைத்து எடுக்கவும். இட்லிகள் பஞ்சு போல் மிருதுவாகவும், புசுபுசுவென்றும் அழகாகவும் வந்திருக்கும். இது தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி தொக்கு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த இட்லி செய்வதற்கு இரவு முழுவதும் ஊறவைக்கவோ, மாவை அரைக்கவோ தேவையில்லை. காலை வேளையில் விரைவாக செய்யக்கூடிய இந்த ஆரோக்கியமான காலை உணவை அனைவரும் முயற்சி செய்து, எப்படி இருந்தது என்பதைப் பகிரவும்.