மிகச் சிறந்த காலை உணவாக வெண்பொங்கல் எல்லோருக்கும் பிடித்த ஒன்றாகும். வாங்க நாம வெண்பொங்கல் எப்படி சத்தாகவும் சுவையாகவும் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி உண்ணும் வகையிலும் எளிமையாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதில் செரிமானத்திற்கு தேவையான மிளகு, சீரகம், இஞ்சிஅனைத்தும் சேர்க்கப்படுவதால் அனைவரும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
பாசி பருப்பு
பால்
நெய்
பச்சை மிளகாய்
இஞ்சி
மிளகு
சீரகம்
முந்திரி
பெருங்காய தூள்
கருவேப்பிலை
உப்பு
எண்ணெய்
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்றாகக் கழுவி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க்கவும். ஒரு கடாயை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் பாசிப்பருப்பை போட்டு பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி தண்ணீரில் கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் மிதமான தீயில் வைத்து, சுமார் 6 கப் தண்ணீர் சேர்த்து, ஊறவைத்த பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து கொள்ளவும். அதில் கால் கப் பால் சேர்த்து மூடி வைத்து சுமார் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
அதில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அடியில் தண்ணீர் இருந்தால், அடுப்பை மிதமான தீயில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை பொங்கலை வைத்து கிளறவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கி மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி மற்றும் பெருஞ்சீரகம் தூள், கருவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
இந்த தாளிப்பை பொங்கலில் ஊற்றி நன்கு கலந்து மேலும் நெய் ஊற்றி கலந்து பரிமாறலாம். இதனை சாம்பார் அல்லது தேங்காய் சட்டினி உடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.