முருங்கையின் வேர் முதல் இலை வரை பயன்படுத்தலாம். முருங்கை மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது. முருங்கை பூ, முருங்கை கீரை, முருங்கைகாய் என அனைத்தும் சமைத்து சாப்பிடலாம். முருங்கை இரும்பு சத்து நிறைந்துள்ளது. கால் வலி, மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கை உணவில் சேர்ப்பது நல்லது. நிபுணர்களும் இதை பரிந்துரைக்கின்றனர். முருங்கைகீரை குழந்தைகளுக்கு கொடுப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்தவகையில் சுவையாக முருங்கை கீரை துவையல் செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 8
புளி - சிறிதளவு
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுத்து புளி சேர்த்து கிளறவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், அவற்றை மிக்ஸில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும். அடுத்து மீண்டும் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும். அவ்வளவு தான்.
இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”