டாக்டர் சிவராமனுக்கு பிடித்த உணவு, திருநெல்வேலி மாப்பிளை சொது இதை நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2
முருங்கைக்காய் – 1-2
பீன்ஸ் -8
கேரட் – 2
வெள்ளை கத்திரிக்காய் – 4
சின்ன வெங்காயம் -8-10
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 30 மிலி
தேங்காய் பால்- 200-250 மிலி (முதல் முறை எடுத்தது)
தேங்காய் பால்- 700-800 மிலி (இரண்டாம் முறை எடுத்தது)
மஞ்சள் – 2 சிட்டிகை
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 ½ டீஸ்பூன்
பாசிபருப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 6-7
உப்பு -தேவையான அளவு
செய்முறை
முதலில் 4 தேங்காய்களை எடுத்து அதை துருவிய பின், அதிலிருந்து முதலில் 250 மிலி அளவுக்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து மீண்டும் இரண்டாம் முறையாக 800 மிலி அளவுக்கு தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பாசி பருப்பில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும். அதனை கரண்டியின் பின்புறத்தை பயன்படுத்தி மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேறிய பின், அதில் இரண்டாம் முறை எடுத்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது கொதிக்க விட வேண்டும்.
அதில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நறுக்கிய வெள்ளை கத்திரிக்காய் சேர்த்து சுமார் 7 நிமிடங்கள் வேக விட வேண்டும். பின்னர் இதில், நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அடுத்ததாக வேறு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான பின்னர், அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கிய பின் இதனை, அடுப்பில் வெந்துக் கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்க்க வேண்டும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இப்போது பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்க வேண்டும். சற்று கொதித்த பிறகு, கடைசியாக முதல் முறை எடுத்த தேங்காய் பாலை இதனுடன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் தாளிப்பதற்காக ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். இதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட வேண்டும்.
நன்றாக பொரிந்த பின்னர், இதை சொதியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளலாம்.