அன்றாட கிடைக்கும் காய் வகைகளில் பெரிய நெல்லியும் ஒன்று. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றுகிறது. வயிற்றுப் புண்களைக் குணமாக்குகிறது. இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கிறது.
மேலும், நமது உடலில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேற்றுகிறது. இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
இப்படியாக ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும் பெரிய நெல்லிக் காய் வைத்து இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற காரசாரமான மற்றும் சூப்பரான சைடிஷ் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லி - 1/2 கிலோ
தண்ணீர் - 1/2 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மல்லி விதை - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கி கீறியது)
கருவேப்பில்லை - ஒரு கை பிடி அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 டீஸ்பூன்
புளி - பெரிய லெமன் அளவு (தண்ணீரில் ஊறவைக்கவும்)
மிளகாய் பொடி - 3 டீஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியது:
ஒரு குக்கர் எடுத்து அதில் நன்கு கழுவிய பெரிய நெல்லியை சேர்க்கவும். இவற்றுடன் அரை கப் அளவு தண்ணீர் சேர்க்கவும். பிறகு அடுப்பை சூடேற்றி குக்கர் 3 விசில் வரும் வரை வைத்து விடவும்.
இதனிடையே, இந்த சைடிஷ் செய்ய தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். ஒரு வாணலி எடுத்து சூடேற்றவும். பிறகு அதில் கடுகு, வெந்தயம், மல்லி விதை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொரிந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை மிக்சியில் போட்டு பவுடர் போல நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், வேக வைத்துள்ள பெரிய நெல்லியை எடுத்து அதில் இருக்கும் விதையை எடுத்து விட்டு மிக்சியில் போடவும். வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து, அடி கனமாக இருக்கும் ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணய் சேர்த்து சூடேற்றவும். பிறகு அதில் கடுகு, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பில்லையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் போகும் அளவுக்கு வதக்கிய பின்னர் அவற்றுடன் பெரிய நெல்லி பேஸ்ட்டை சேர்க்கவும். அவற்றை நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் மஞ்சள் தூள், கல் உப்பு, புளி தண்ணீர் சேர்க்கவும். புளியின் பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
தொடர்ந்து, மிளகாய் பொடி மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் அடுப்பை மீடியமாக வைத்து 3 முதல் 4 நிமிடம் வரை வைத்து கொதிக்க வைக்கவும். அவை நன்கு சுண்டி வந்த பிறகு பார்த்தல் உங்களுக்கு தேவையான நெல்லிக்காய் தொக்கு தயார்.
இவற்றை நன்கு ஆற வைத்தது ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை வைத்து கூட ருசிக்கலாம். குறிப்பாக, இட்லி, தோசை, சப்பாத்திக்கு இது சூப்பரான சைடிஷ். நீங்களும் ஒருமுறை நிச்சயம் டிரை பண்ணுங்க மக்களே!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.