ரசம் என்ற பெயரில் இத்தனை நாட்களாக வெறும் புளி கரைசலை செய்து சாப்பீட்டு வந்துள்ளீர்களா? அப்போ ஒரு முறை இந்த மாதிரி ரசம் செய்து சாப்பிடுங்கள்.. ரசத்தின் மணமே பசியை தூண்டும் அளவிற்கு இருக்கும். அப்படிப்பட்ட ரசத்தை செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மிளகு
சீரகம்
பச்சை மிளகாய்
புளி
தக்காளி
தேங்காய்
துவரம் பருப்பு
மஞ்சள் தூள்
சாம்பார் பொடி
பெருங்காயத்தூள்
கொத்தமல்லி தழை
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
நெய்
(பொருட்கள் அனைத்தையும் நீங்கள் எத்தனை பேருக்கு ரசம் செய்கிறீர்களோ அந்த அளவு பயன்படுத்தினால் போதுமானது.)
முதலில் ஒரு குக்கரில் தேவையான அளவு துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பருப்பு நன்கு குழைந்து தண்ணீருடன் கரைந்த பதத்தில் வெந்து இருக்க வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை இவை அனைத்தையும் கொரகொரப்பான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்த புளியை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் புளிக்கரைசலை ஊற்றி நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் இவை அனைத்தையும் கலந்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
புளிக்கரைசல் பச்சை வாசம் நீங்கியவுடன் அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும். பின்னர் நன்றாக குழைய வேகவைத்த பருப்பு தண்ணீரை இதில் ஊற்ற வேண்டும்.
பருப்புத் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்ட பிறகு அடுப்பை மீடியம் பிளேமில் வைக்க வேண்டும். பின்னர் தாளிப்புக்கு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு பொரிந்த உடன் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி ரசத்தில் இந்த தாளிப்பை கொட்ட வேண்டும்.
பின்னர் இதன் மீது தேவையான அளவு நெய் சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவி கலந்து விடவும். இறுதியாக துருவிய தேங்காயை மேலே தூவி கலந்து விடவும்.
பின்னர் ரசம் நுரை கட்டி வாசம் வந்தவுடன் உடனே ரசத்தை இறக்கி விட வேண்டும். ரசத்தை அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. அப்படி கொதிக்க விட்டால் மசாலாக்கள் கீழே இறங்கி வெறும் தண்ணீர் மட்டும் மேலே நிற்கும் சாப்பிடவும் நன்றாக இருக்காது எனவே நுரை கட்டிய உடன் இறக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“