எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டியை தேடுபவர்களுக்கு இந்த சுவையான சமோசா ஒரு சிறந்த வழி. இது பொரிக்கப்படாமல் தயாரிக்கப்படுவதால், எந்த ஒரு தயக்கமும் இன்றி சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று ஸ்பைசிகறி தமிழ் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
ரவை – 1/4 கப்
ஓமம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லி (தனியா) விதைகள் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி-பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கசூரி மேத்தி – 1 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – 1/4 கப்
கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவு, கால் கப் ரவை, ஒரு டீஸ்பூன் ஓமம் (கசக்கி சேர்க்கவும்), அரை டீஸ்பூன் உப்பு, மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை 30 நிமிடங்கள் ஊற விடவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டீஸ்பூன் மல்லி, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி-பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், வேக வைத்த இரண்டு உருளைக்கிழங்கு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் சாட் மசாலா, அரை டீஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிது கசூரி மேத்தி சேர்த்து, நன்றாக கலந்து மசித்து விடவும். இறுதியாக, கால் கப் வேக வைத்த பட்டாணி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்தால், சுவையான ஃபில்லிங் தயார்.
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, கைகளில் மெல்லியதாக தட்டி, நடுவில் ஃபில்லிங்கை வைத்து சிறிய குட்டி பந்துகளாக உருட்டி எடுக்கவும். ஒரு பணியாரக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், தயார் செய்த சமோசா உருண்டைகளை வைத்து, குறைந்த தீயில் எல்லா பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை சுடவும். இதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகலாம்.