கேரளாவின் முக்கிய பண்டிகையாக ஓணம் உள்ளது. ஆண்டுதோறும் இந்தப் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்தநாளில் மக்கள் புத்தாடை அணிந்து, வகை வகையான உணவு சமைத்து வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடுவர்.
அதிலும் குறிப்பாக உணவில் அடை பிரதமன் என்று பரிமாறப்படும் பாயாசம் மிகவும் ருசியாக இருக்கும். அந்த அடை பிரதமன் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இந்தாண்டு ஓணம் இன்று தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அடை பிரதமன் செய்ய,
தேவையான பொருட்கள்
அரிசி - 1/2 டம்ளர்
தேங்காய்ப் பால் - 4 டம்ளர்
வெல்லம் - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - சுவைக்கு
பால் - 1 டம்ளர்
நெய் - தேவைக்கு
தேங்காய் துண்டுகள் - கைப்பிடி அளவு
முந்திரி - தேவையான அளவு
உலர் திராட்சை - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெல்லத்தை அடுப்பில் வைத்து காய்ச்சி தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும். அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து நெய் சேர்த்து முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் தித்திப்பான அடை பிரதமன் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“