வீட்டில் வெங்காயம் மட்டுமே இருக்கும்போது, விரைவாகவும் சுவையாகவும் மதிய உணவுக்கு என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்! இந்த ஒன்பாட் வெங்காய சாதம் எப்படி செய்வது என்று மைசெல்ஃப் டைம் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
பிரியாணி மசாலாப் பொருட்கள் (ஏலக்காய் - 2)
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா - அரை ஸ்பூன்
பாஸ்மதி அரிசி - 1 கிளாஸ் (அரை மணி நேரம் ஊற வைத்தது)
தண்ணீர் - ஒன்றரை கிளாஸ்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
ஒரு குக்கரை எடுத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், பிரியாணி மசாலாப் பொருட்கள் மற்றும் இரண்டு ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் அதிகமாக வதங்கக் கூடாது.
அடுத்து, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியாத்தூள், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் பிரியாணி மசாலா சேர்த்து நன்றாகக் கிளறவும். இதே கிளாஸில் ஒரு கிளாஸ் அளவுக்கு அரை மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை எடுத்து, அதற்கு ஒன்றரை கிளாஸ் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீரில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து, நன்றாகக் கொதி வரும்போது அரிசியைச் சேர்க்கவும். குக்கரை மூடி, முதல் விசில் மற்றும் இரண்டாவது விசில் குறைந்த தீயில் வர விடவும். பிறகு, குக்கரின் காற்று முழுமையாக வெளியேறியதும், மூடியைத் திறக்கவும்.
அவ்வளவுதான், ஒரு சூப்பரான, சுவையான ஒன்பாட் வெங்காய சாதம் தயார். இது செய்வதற்கு மிகவும் எளிமையானது மட்டுமல்லாமல், மிகவும் சுவையானதும்கூட.