நம் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு முருங்கைக்கீரை உதவுகிறது. குறிப்பாக அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முருங்கைக்கீரை தினமும் சாப்பிடலாம். ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி தினசரி மாத்திரை சாப்பிட்டு வருவார்கள்.
அவர்கள் மருந்து மாத்திரைகளுடன் சேர்த்து உணவில் முருங்கைகீரையையும் சேர்த்து சாப்பிடலாம். முருங்கை கீரையை சூப்பு மாதிரி வைத்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஒரு கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை
ஒரு ஸ்பூன் மிளகு
ஒரு ஸ்பூன் சீரகம்
சின்ன வெங்காயம் - 5
வெள்ளைப் பூண்டு - 5
உப்பு - தேவையான அளவு
முருங்கை இலையை அதன் கிளைக் காம்புகளில் இருந்து ஆய்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு இலை எடுத்துக் கொண்டு, நீர் விட்டு நன்கு கழுவிய பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, உள்ளே முருங்கைக் கீரையைப் போட்டு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், வெள்ளைப்பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். தேவைக்கு ஏறப் உப்பு போட்டு நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து சுமார் 20 நிமிடம் காய்ச்ச வேண்டும். 2 டம்ளராக விட்ட தண்ணீர் சுமார் ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவுக்கு வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு அரிப்பு மூலமாக முருங்கை இலை சூப்பை அரித்து தனியாக பிரித்து எடுங்கள். இப்போது சுவையான, உடலுக்கு மிகவும் தேவையான சத்துகள் அடங்கிய முருங்கைக் கீரை சூப் ரெடியாகி விடும்.
சற்று சூடாகவே இதை அருந்துவது நல்லது. கொஞ்சம் காரசாரமாக விரும்புகிறவர்கள் கூடுதலாக அரை ஸ்பூன் மிளகுத் தூள், சிறு துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். சூப் வடித்து மீதியான முருங்கை கீரையுடன் துருவிய தேங்காய், சேர்த்து பொறியல் போலவும் செய்து சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“