இட்லிக்கு சட்னி எப்போதும் ஏற்றது. நாம் வீட்டில் என்னதான் சட்னி செய்தாலும் அது ஹோட்டலில் செய்வது போல வரவில்லை என்று நினைக்கிறீர்களா. உங்களுக்காக ஹோட்டல் ஸ்டைல், தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, இனிப்பு, புளிப்பு கார சுவையுடன் பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் ரெசிபியை இங்கே தருகிறோம்.
ஹோட்டல் ஸ்டைலில் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, இனிப்பு, புளிப்பு கார சுவையுடன் பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் எப்படி செய்கிறார் என்பதை இங்கே பார்க்கலாம்.
தேங்காய் சட்னி செய்முறை
ஒரு பெரிய தேங்காயின் ஒரு மூடியை துருவி வைத்துக்கொள்ளுங்கள். எப்படி தேங்காய் துருவ வேண்டும் என்றால், தேங்காயில் உள் பகுதியில் இருக்கிற கொட்டங்குச்சி பகுதி வராமல் இருக்கும்படி சீவி விட்டு தேங்காயை துருவி வைத்துக்கொள்ளுங்கள். துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போடுங்கள். அதில் ஒரு கைப்பிடி பொட்டுக் கடலை (50 கிராம்) போடுங்கள். 3-4 பச்சை மிளகாய் போடுங்கள். இஞ்சி ஒரு விரல் அளவு எடுத்து தோல் சீவி துண்டுகளாக நறுக்கிப் போட்டுக் கொள்ளுங்கள். அரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் கால் டம்ப்ளர் ஊற்றுங்கள். சட்னிக்கு தேவையான அளவு உப்பு போடுங்கள். இப்போது மிக்சியை மூடி திப்பியாக அரையுங்கள். மையாக அரைக்காதீர்கள். சிறிது அளவு திப்பியாக இருக்க வேண்டும் அப்போதுதான் நன்றாக இருக்கும்.தேங்காய் சட்னியை அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள்.
வெங்காய சட்னி செய்முறை
2 பெரிய வெங்காயம் - 150 கிராம்
வெங்காயத்தை பெரிய அளவில் 6 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதை எடுத்து மிக்ஸி ஜாரில் போடுங்கள். அதனுடன் காய்ந்த மங்களூரு மிளகாய் 5 எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான்ன் நல்ல காரமும் சிவப்பு நிறமும் கிடைக்கும். அவசியம் மங்களூரு மிளகாய்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் சிறிது அளவு புளி சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து 40 கிராம் வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள். 4 பத்தை தேங்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
அடுத்து, இந்த சட்னிக்கு தேவையான அளவு அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது இவை எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் 2 நிமிடத்தில் அரைத்து மிக்ஸி ஜாரை திறந்தீர்கள் என்றால் வெங்காய சட்னி ரெடி.
தாளிப்பு
இப்போது இந்த தேங்காய் சட்னிக்கும் வெங்காய சட்னிக்கும் தாளிப்பு கொடுக்க வேண்டும். ஸ்டவ்வில் வானலியை வைத்து தீ பற்ற வையுங்கள். வானலி காய்ந்ததும், 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றுங்கள்.
அதில், ஒரு காய்ந்த மிளகாயை சின்னசின்னதாக கிள்ளி போடுங்கள். லேசாக வறுந்ததும், முக்கால் டீஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்ததும், அதில் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு போடுங்கள். தீயை சிம்மில் வைத்துக்க்கொள்ளுங்கள். உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வரட்டும். அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை போடுங்கள். அவ்வளவுதான் ஸ்டவ்வை அனைத்து விடுங்கள்.
இப்போது இந்த தாளிப்பை ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள தேவெங்காய் சட்னியிலும் இப்போது அரைத்த வெங்காய சட்னியிலும் சம அளவில் போடுங்கள் அவ்வளவுதான், பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் சொல்கிற ஹோட்டல் ஸ்டைலில் இனிப்பு, புளிப்பு கார சுவையுடன் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.