/indian-express-tamil/media/media_files/2025/02/12/RszOuLbeQ2iZNRXmml8b.jpg)
அம்மிக்கல்லில் அரைத்துச் செய்யும் சமையல் பொருட்களுக்கு எப்போதும் ஒரு தனிச் சுவை உண்டு. குறிப்பாக, சட்னி வகைகளை அம்மிக்கல்லில் அரைக்கும்போது அதன் சுவை அலாதியானது. அதிலும், காரசாரமான தக்காளி வெங்காய சட்னியை அம்மிக்கல்லில் அரைத்துச் சாப்பிட்டால் அதன் ருசிக்கு ஈடு இணை இல்லை. வடை,பஜ்ஜி, இட்லி, தோசை, பொங்கல் போன்ற அனைத்து பலகாரங்களுக்கும் இது நன்றாக இருக்கும். இதை எளிமையாக எப்படி செய்வது என்று ஃபிட்ஜீ இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 2
சிவப்பு மிளகாய் - 5-6 (உங்கள் காரத்திற்கு ஏற்ப)
பூண்டு - 3-4 பல்
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை:
முதலில், அம்மிக்கல்லை சுத்தமாகத் துடைத்து, அதன் மேல் சிவப்பு மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். மிளகாயை நன்றாக மைய அரைப்பது மிகவும் முக்கியம். அடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அம்மியில் போட்டு, பூண்டு-மிளகாய் விழுதுடன் சேர்த்து மெதுவாக அரைக்கவும். வெங்காயம் பாதி அரைபட்டதும், அதனை வழித்து ஓரமாக வைக்கவும்.
பிறகு, தக்காளியை அம்மியில் வைத்து, அதனுடன் புளியை சேர்த்து நன்றாக மையாக அரைக்கவும். அம்மியில் அரைக்கும்போது அதன் சாறு முழுமையாக வெளியேறுவதால், சட்னி தனித்துவமான சுவையைப் பெறும். இப்போது, ஏற்கனவே அரைத்து வைத்த வெங்காயம், பூண்டு, மிளகாய் கலவையை தக்காளி விழுதுடன் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக அரைக்கவும். அனைத்து பொருட்களும் நன்கு கலந்த பிறகு, சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.
ஒரு சிறிய வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டி நன்றாகக் கலக்கவும். அம்மிக்கல்லில் அரைத்த இந்த சுவையான சட்னியை சூடான இட்லி, தோசையுடன் அல்லது சாதத்துடன் சேர்த்துப் பரிமாறலாம். அதேபோல வடை, பஜ்ஜிக்கும் நன்றாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.