சின்ன வெங்காயம் சமையலுக்கு பயன்படுத்துவோம். சாம்பார் முதல் ப்ரைடு ரைஸ் வரை அனைத்திற்கும் வெங்காயம் பயன்படுத்துவோம். இது உணவில் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி மருத்துவ பலன்களும் உள்ளது. சின்ன வெங்காயம் வைத்து வடகம் செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - அரை கிலோ
வெள்ளை முழு உளுந்து - 200 கிராம்
பெருங்காயப்பொடி - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ஸ்பூன்
வெந்தயப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 10
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 1 பெரியது
செய்முறை
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி பொடிதாக நறுக்கி 1 பேப்பரில் வைத்த 4 மணி நேரம் வரை உலர விடவும். உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து வைக்கவும். மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
உளுந்தம் பருப்பை தண்ணீரை வடித்து கழுவி அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும். மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். அரைத்த மாவுடன் காய வைத்துள்ள வெங்காயம், கடுகு, பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். இப்போது ஒரு துணி விரிந்து அதில் சிறிது சிறிதாக மாவை எடுத்து வைக்கவும். வெயிலில் காய வைக்கவும்.
இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும். பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது எண்ணெய்யில் போட்டு வறுத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் காரமான மொறு மொறு வெங்காய வடகம் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil