Advertisment

குழந்தைகளும் விரும்புற மாதிரி பாகற்காய் குழம்பு... சின்ன வெங்காயம் இவ்ளோ சேருங்க: செஃப் சுந்தர்

ஏரளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கி இருக்கும் பாகற்காயில், நம்முடைய குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் செஃப் சுந்தர் ஸ்டைலில் பாகற்காய் குழம்பு எப்படி எளிதில் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
pagarkai kulambu Bitter Gourd Kulambu by chef sundar in tamil

பாகற்காய் ஜூஸ் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவந்தால் கல்லீரல் பிரச்னைகள் பறந்து போகும்.

பாகற்காய் என்கிற வார்த்தையை கேட்டாலே நம்மில் பலர் முகம் சுளிப்போம். அந்த அளவுக்கு கசப்பு தன்மை நிறைந்த காய்கறியாக பாகற்காய் இருக்கிறது. “கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்" என்கிற முதுமொழிக்கு ஏற்ப, கசப்பு நிரம்பிய இந்த பாகற்காயில் தான் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மிகுந்து காணப்படுகிறது. 

Advertisment

கசப்பு சுவையுடைய இந்த அற்புத காய்கறி ஏரளமான மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இவற்றை தங்களது அன்றாட உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டு வரும் மக்களுக்கு முகத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை எளிதில் நீங்குகிறது. 

பாகற்காயை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறை மிக்ஸ் செய்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் ஆறு மாதம் பருகி வந்தால் மேற்கூறிய பிரச்சனை இருப்பவர்கள் சிறப்பான பலன்களை பெறலாம்.

பாகற்காய் ஜூஸ் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவந்தால் கல்லீரல் பிரச்னைகள் பறந்து போகும்.

பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் தினந்தோறும் பருகி வந்தால் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக உள்ளது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

இப்படி ஏரளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கி இருக்கும் பாகற்காயில், நம்முடைய குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் செஃப் சுந்தர் ஸ்டைலில் பாகற்காய் குழம்பு எப்படி எளிதில் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். 

பாகற்காய் குழம்பு - தேவையான பொருட்கள்:

பாகற்காய் வதக்க 

பாகற்காய் - 300 கிராம் 
நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/4 ஸ்பூன் 
கருவேப்பிலை - ஒரு கொத்து 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
கல் உப்பு 

குழம்பு தயாரிக்க 

நல்லெண்ணெய் - 9 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 ஸ்பூன் 
வெந்தயம் - 1/4 ஸ்பூன் 
கருவேப்பிலை - ஒரு கொத்து 
பூண்டு - 8 பற்கள் 
சின்ன வெங்காயம் - 30 
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
கல் உப்பு 
தக்காளி - 3 (மிக்சியில் அரைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
குழம்பு மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன் 
கொத்தமல்லி தழை - (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் சிறிதளவு 
புளி - 1 எலுமிச்சை அளவு (வெந்நீரில் கரைத்தது)
வெல்லம் - 1 ஸ்பூன் 

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் பாகற்காயை எடுத்து அதனை நன்கு அலசி கழுவிக் கொள்ளவும். பிறகு அவற்றை இரண்டாக வெட்டி நடுவில் உள்ள விதைகளை நீக்கி விடவும். விதை இல்லாத பாகற்காய்க்கு இது தேவையில்லை. 

இதன்பிறகு, ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு கடுகு போட்டு பொரிந்து வந்தவுடன், கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர், ஏற்கனவே வெட்டி வைத்துள்ள பாகற்காயை சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்கு கலந்து விட்ட பிறகு, அதனுடன் மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து  பாகற்காயை நன்கு வதக்கவும். குறைந்தது 10 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு அவற்றை அப்படியே ஒரு தட்டில் தனியாக வைத்து விடவும். 

இப்போது குழம்பு தயார் செய்ய, அதே கடாயில்  நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு கடுகு போட்டு பொரிந்து வந்தவுடன், வெந்தயம் சேர்க்கவும். பின்னர் கருவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் சேர்த்தும் வதக்கிக் கொள்ளவும். 

இதன்பிறகு, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.  தக்காளி நன்கு வதங்கி வரும் போது, மிக்சியில் அரைத்த தக்காளி சேர்க்கவும். அதனுடன், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 

பின்னர், புளி கரைசல் சேர்த்து 2 நிமிடங்களுக்கு  கொதிக்க விடவும். அதாவது, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். இவை கொதித்து வந்ததுவும், வெல்லம் சேர்க்கவும். இவற்றுடன் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விட்டு கீழே இறக்கினால், நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான பாகற்காய் குழம்பு ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment