பரோட்டா கடை ஸ்டைலில் டேஸ்டான சால்னா எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.
பரோட்டா கடை ஸ்டைலில் டேஸ்டான சால்னா எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.
பரோட்டா கடை சால்னா என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஹோட்டல்களில் மட்டும் தான் அந்த சுவை இருக்கும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால், வீட்டிலேயே எப்படி சுவையான பரோட்டா சால்னா செய்யலாம் என பார்ப்போம். இது இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும்.
அடுப்பில் கடாய் வைத்து அதனை சூடுபடுத்த வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், மிளகு, சிறிய துண்டு கல்பாசி, பட்டை, இரண்டு ஏலக்காய் மற்றும் மூன்று கிராம்பு சேர்த்து இளஞ்சூடாக வறுக்க வேண்டும். குறிப்பாக, இதில் இருந்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
இதையடுத்து, ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி இத்துடன் சேர்க்கலாம். வெங்காயத்தை வதக்குவதற்காக ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். இவற்றை இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்னர், ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி இலைகள், தக்காளி மற்றும் புதினா சேர்க்கலாம்.
இவை அனைத்தையும் மூன்று நிமிடங்களுக்கு வதக்கிய பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிட்டு, இவற்றை ஆற வைக்க வேண்டும். இது ஆறியதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இதன் பின்னர், தேங்காய் துருவல், 15 முந்திரி பருப்பு, ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து பசை பக்குவத்திற்கு அரைக்க வேண்டும். இப்போது, அடுப்பில் குக்கர் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம்.
இதில் அரை ஸ்பூன் சோம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். இதையடுத்து, சிறிதளவில் தக்காளியை அரைத்து சேர்க்கலாம்.
இந்தக் கலவையுடன் லேசாக மல்லித்தூள், கரம் மசாலா, தனி மிளகாய்த் தூள் ஆகியவை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கலக்கலாம். இதற்கடுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இதனை இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பரோட்டா கடை சால்னா தயாராகி விடும்.