பூரியும் பட்டாணி மசாலாவும் இந்திய உணவுகளில் ஒரு பிரபலமான இணை. குறிப்பாக காலை உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ இது பல வீடுகளில் தயாரிக்கப்படுகிறது. அதிலும் பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாதான் பிரபலமானது. ஆனால் அதற்கு புதிதாக பட்டாணி மசாலா எப்படி செய்வது என்று 2மினிட்ஸ் செஃப் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1-2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை:
பச்சை பட்டாணி புதியதாக இருந்தால், அதை 5-7 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். உறைந்த பட்டாணி என்றால், நேரடியாகப் பயன்படுத்தலாம். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
கொதிக்க வைத்த அல்லது உறைந்த பட்டாணியை சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலக்கவும். சிறிதளவு தண்ணீர் (சுமார் 1/2 கப்) சேர்த்து, மசாலா கெட்டியாகும் வரை அல்லது பட்டாணி நன்கு வெந்து மசாலாவுடன் கலக்கும் வரை சமைக்கவும். (சமைக்கும் நேரம் சுமார் 5-7 நிமிடங்கள்)
இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இந்த சுவையான பட்டாணி மசாலா, சூடான, புசு புசு பூரிகளுடன் பரிமாற அற்புதமாக இருக்கும். இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமாக செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்தலாம்.