வேர்க்கடலை, எள்ளில் நிறைய நன்மைகள் இருக்கிறது. வேர்க்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதை நாம் உட்கொள்ளும்போது ஆரோக்கியம் மேம்படுகிறது. வேர்க்கடலை எள் பர்ஃபி வீட்டிலேயே செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை – 1 கப்
எள் – அரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
பால் பவுடர் – 6 டேபிள் ஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – முக்கால் கப்
தண்ணீர் – 1 கப்
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்தெடுத்து கொள்ளவும். எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும். எள் ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அடுத்ததாக வறுத்த வேர்க்கடலையும் பொடியாக்கி கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் பொடித்த வேர்க்கடலை, எள் பொடி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும். பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி லேசாக சூடானவுடன் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை சேர்த்து கிளறவும்.
நெய் எல்லாம் உறிஞ்சி கலவை நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து, பால் பவுடர் மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். மற்றொரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கலவை சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கிளறவும். கலவை நன்கு திரண்டு வரும் போது, நெய் தடவிய தட்டில் கலவை ஊற்றி ஆறவிடவும். 1 மணி நேரத்திற்கு பின் கலவை காய்ந்த உடன் தேவையான வடிவத்தில் கட் செய்து சாப்பிடலாம். அவ்வளவு தான் சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை எள் பர்ஃபி ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/