அன்னாசிப் பழம் பலருக்கும் பிடிக்கும். பழமாக அப்படியே சாப்பிடலாம். ஆனால் இதில் பாயாசம் செய்தால் இன்னும் சுவையாக இனிப்பாக இருக்கும். பாயாசத்தில் பழங்களை சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். தித்திப்பான அன்னாசிப் பழ பாயாசம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்
காய்ச்சிய பால் – 1 லிட்டர்
கன்டென்ஸ்டு மில்க் – 1 கப்
ஜவ்வரிசி – 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் – 1
ஸ்பூன் நெய் – தேவையான அளவு
முந்திரி – தேவையான அளவு
கிஸ்மிஸ் – தேவையான அளவு
செய்முறை
அன்னாசி பழத்தினை தோல் சீவி ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசியை அலசி சிறிதளவு தண்ணீரில் ஊற வைக்கவும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சிக் கொள்ள வேண்டும். மற்றொரு அடுப்பில் வேறு ஒரு பாத்திரம் வைத்து 1.5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதித்த பின் அந்த தண்ணீரை வடிகட்டி ஜவ்வரிசியை குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது முதல் அடுப்பில் வைத்த பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பாதியளவு அன்னாசிப் பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அடுத்து அதில் அலசி வைத்துள்ள ஜவ்வரிசியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். பிறகு அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கன்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதால் அதில் இருக்கும் சர்க்கரை சுவையே போதுமானது. பாயாசம் நன்றாக கெட்டியான பின் அடுப்பினை அணைத்துவிட்டு பாயாசத்தை இறக்கி வைக்கவும்.
இப்போது இதில் ஒரு துளி பைனாப்பிள் எசன்ஸ் மற்றும் மீதமுள்ள அன்னாசிப் பழ துண்டுகளை சேர்க்க வேண்டும். அடுப்பில் ஒரு சிறிய பான் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் ஊற்றி அலங்கரித்தால் தித்திப்பான அன்னாசிப் பழ பாயாசம் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“