பிரண்டை ஒரு தாவர வகையாகும். இவை வேலி ஓரங்களில் கொடியாக படர்ந்து வளரக்கூடியவை ஆகும். பழங்காலத்தில் இருந்து இவை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனித எலும்பு மண்டலத்தை இரும்பு போல் வலுவாக வைக்கும் திறன் பிரண்டைக்கு உண்டு. இதனால் இதை வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள்.
பிரண்டை எலும்பு வளர்ச்சி, பசியின்மை, சுளுக்கு, செரிமானம், வயிறு உப்பிசம், முதுகு வலி, கழுத்து வலி, வாந்தி, பேதி, வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் பருமன், பசியின்மை, மலச்சிக்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது.
பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வாயுப் பிடிப்பு, தீராத வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது. மேலும் உடல் சுறுசுறுப்பை அதிகரித்து ஞாபக சக்தியை பெருகச் செய்கிறது. மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு அதிக சக்தி தருகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துகிறது.
இப்படி ஏராளமான அற்புத மருத்துவ பயன்களை கொண்டுள்ள பிரண்டையில் எப்படி ருசியான துவையல் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். இந்த துவையலை சாதம், இட்லி, தோசை என அனைத்து வகை உணவுக்கும் சைடிஷ் ஆக வைத்து ருசித்து மகிழலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பிஞ்சு பிரண்டை - 1 கப்
உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - 4 துண்டு
வரமிளகாய் - 7
புளி - சிறிய நெல்லி அளவு
பூண்டு - 3
உப்பு - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் பிஞ்சு பிரண்டை சேர்த்து வதக்கவும். இவற்றை நன்கு வதக்க வேண்டும். இல்லையென்றால் நாக்கில் அறிப்பு ஏற்படும். அதனால், அவற்றை நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதனை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் உளுந்து, கட்டி பெருங்காயம் சேர்க்கவும். உளுந்து நன்றாக வதங்கி வந்த பின், அதனுடன் வரமிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தனியாக வைத்து ஆற விடவும். ஆறிய பிறகு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பிரண்டையுடன் சேர்த்து எடுத்தால், டேஸ்டியான பிரண்டை துவையல் ரெடி.