உண்ணாவிரதம் உடலின் சிந்தனை செயல்முறையை துரிதப்படுத்துகிறது. உண்ணாவிரதம் உண்மையில் ஒரு அறிவியல் செயல்முறை என்று அண்மையில் ஒளிபரப்பான லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டில் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். அது வெறும் மத செயல்பாடு என்பதைக் கடந்து உள்ளார்ந்த ஒழுக்கத்தின் வெளிப்பாடாக மாறிவிட்டது எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளராரும், பாட்கேஸ்டருமான அலெக்ஸ் ஃப்ரிட்மேன். இவர் எலான் மஸ்க், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட பலரையும் நேர்காணல் செய்துள்ளார். தற்போது இவர் பிரதமர் மோடியை நேர்காணல் செய்துள்ளார். இந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, தனது உடல் ஆரோக்கியம் குறித்தும் பேசினார். அப்போது கடந்த 50 முதல் 55 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் விரத நடைமுறைகள் தொடர்பாகவும் பேசினார்.
அதில், தான் ஆண்டு முழுவதும் பல்வேறு விரதங்களைக் கடைப்பிடிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள், ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவதாக வெளிப்படுத்தினார். மேலும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பழம் உண்பதையும் சில நேரங்களில் வெந்நீர் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.
தனது உண்ணாவிரத அட்டவணை பிரதமர் மோடி பேசுகையில்,"மழைக் காலங்களில், உடலில் செரிமானம் மெதுவாக நடக்கும். எனவே மழைக் கால பருவத்தில், இந்தியாவில் பலர் 24 மணி நேரத்திற்குள் ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்கி தீபாவளிக்குப் பிறகு நவம்பர் மாதம் வரை, சுமார் நான்கரை மாதங்களுக்கு, 24 மணி நேரத்திற்கு ஒரேயொரு முறை மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளேன் என்றார்.
வழக்கமாக செப்டம்பர் அல்லது அக்டோபரில் இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வலிமை, பக்தி மற்றும் ஆன்மீக ஒழுக்கத்தின் பண்டிகை இது. 9 நாட்கள் நீடிக்கும் இந்த பண்டிகை காலத்தில், நான் உணவை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு வெந்நீரை மட்டுமே குடிப்பேன். வெந்நீர் குடிப்பது எப்போதும் எனது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதி.
பின்னர் மார்ச், ஏப்ரல் மாதங்களில், சைத்ர நவராத்திரி என்று அழைக்கப்படும் மற்றொரு நவராத்திரி வருகிறது. இந்த வருடம், அது மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும். இந்த நவராத்திரியின் ஒன்பது நாள் விரதத்தின் போது, நான் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பழத்தை மட்டுமே சாப்பிடுவேன். உதாரணத்துக்கு பப்பாளியைத் தேர்வு செய்கிறேன் என்றால் ஒன்பது நாட்களுக்கும் பப்பாளி பழத்தைத் தவிர நான் வேறு எதையும் தொட மாட்டேன். அதுவும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவேன். அப்படித்தான் நான் எனது அந்த ஒன்பது நாள் விரத வழக்கத்தைப் பின்பற்றுகிறேன்.
இப்படி வருடம் முழுவதும் நான் ஏராளமான விரதங்களைக் கடைப்பிடிக்கிறேன். விரதங்கள் என் வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றிய ஒரு பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த நடைமுறைகளை கடந்த 55 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறேன்." என்று பிரதமர் மோடி கூறினார்.