மாதுளை மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான பழங்களில் ஒன்றாகும். ஆனால், தினமும் காலையில் இதை சாப்பிடுவது நல்லதா? ஊட்டச்சத்து நிபுணரும், உணவு ஆலோசகருமான ரச்சனா மோகன் தினமும் காலையில் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். "இது ஆன்டிஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம். குடலுக்கு இது ஒரு வரம்" என்று அவர் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, மாதுளையில் வைட்டமின் சி நிறைவாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், சளி மற்றும் தொற்றுநோய்களையும் அழிக்க உதவுகிறது. ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சருமத்தையும் பளபளப்பாக மாற்றுகிறது. "இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஆரோக்கியமான குடலுக்கு உதவுகிறது" என்கிறார் மோகன்.
அவரைத் தொடர்ந்து, தினமும் காலையில் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (அல்லது தீமைகள்) பற்றி மேலும் அறிய நிபுணர்களை அணுகினோம்.
சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்களின் களஞ்சியம்:
மாதுளையில் பியூனிகாலஜின்ஸ் மற்றும் அந்தோசயானின்கள் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலும், சருமத்தையும் பளபளப்பாக வைத்திருக்கின்றன என்று ஹைதராபாத் யசோதா மருத்துவமனைகளின் பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் ரங்கா சந்தோஷ் குமார் கூறுகிறார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
மாதுளையில் உள்ள பாலிஃபீனால்கள் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்களாக செயல்பட்டு, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. "மாதுளை சாறு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும் உதவுகிறது" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரும், நியூட்ராசி லைஃப்ஸ்டைன் நிறுவனருமான டாக்டர் ரோஹினி பாட்டீல்.
டாக்டர் குமாரின் கூற்றுப்படி, மாதுளை "கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துதல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் தமனி அடைப்பைத் தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறப்படுகிறது.
அதிக நன்மைகள்:
மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. வைட்டமின் சி மற்றும் கே, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உட்கொள்வது உங்கள் உணவில் கட்டாயம் இருக்க வேண்டும். "எனவே, நீங்கள் காலையில் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து சிறந்த செரிமானத்திற்கு உதவும், இது மலச்சிக்கலைத் தடுக்கிறது" என்று டாக்டர் குமார் கூறுகிறார்.
மாதுளையில் உள்ள நார்ச்சத்து குடல் வீக்கத்தைக் குறைத்து செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது ஐபிஎஸ் மற்றும் கிரோன் நோய் போன்ற நிலைகளுக்கு நன்மை பயக்கும் என்று டாக்டர் பாட்டீல் குறிப்பிடுகிறார்.
ஒரு கிண்ணம் மாதுளை உதவக்கூடும் என்றாலும், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நீண்ட ஆயுளுக்கு சமச்சீர் மற்றும் பலவிதமான உணவு முக்கியம் என்று டாக்டர் குமார் வலியுறுத்துகிறார்.