பாண்டிச்சேரி ஸ்டைலில் சுவிஅயான தொக்கு பிரியாணி எப்படி செய்வது என்று ஸ்பைஸ்ஃபார்டேஸ்ட் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா
சீரகத்தூள்
காஷ்மீரி மிளகாய் தூள்
அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுது
சிக்கன் துண்டுகள்
முந்திரி விழுது
கொத்தமல்லி இலை
குஸ்கா
எண்ணெய்
நெய்
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு விழுது
கரம் மசாலா
பிரியாணி மசாலா
தயிர்
புதினா இலை
கொத்தமல்லி இலை
பாஸ்மதி அரிசி
உப்பு
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களைச் சேர்க்கவும். அவை பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர், நறுக்கிய தக்காளி பழத்தைச் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும். தக்காளி வதங்கியதும், கடாயை மூடி போட்டு சில நிமிடங்கள் வேக விடவும்.
இப்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள், காஷ்மீரி மிளகாய் தூள் போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்து நன்கு கலந்து வதக்கவும். மசாலா வாசனை வந்தவுடன், அரைத்து வைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதைச் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்திற்கு வர விடவும்.
கடைசியாக, சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அரை கிளாஸ் தண்ணீர் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். கடாயை மூடி போட்டு, சிக்கன் நன்கு வெந்து மசாலாவுடன் கலக்கும் வரை சுமார் 20 நிமிடம் வேக விடவும். சிக்கன் வெந்ததும், முந்திரி விழுதைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரேவி தயார்.
மற்றொரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். பின்னர், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், நறுக்கிய தக்காளி பழத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், கரம் மசாலா மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு சிறிய கப் தயிரைச் சேர்த்து கிளறி, பின்னர் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். இப்போது, ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாக கிளறி விடவும், அரிசி உடையாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் அரிசிக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
கடாயை மூடி போட்டு, குறைந்த தீயில் சுமார் 10 நிமிடம் தம் போட்டு எடுத்தால், உதிரி உதிரியாகவும், வாசனை மிகுந்ததாகவும் குஸ்கா தயாராகிவிடும். தொக்கு பிரியாணியை பரிமாறும்போது, முதலில் கிரேவியை ஒரு கிண்ணத்தில் வைத்து, அதன் மேல் உதிரி உதிரியான குஸ்காவை அழகாகப் பரப்பவும். பின்னர் ஒரு தட்டில் கிரேவியுடன் சிக்கன் துண்டுகளையும், குஸ்காவையும் சேர்த்து சூடான நிலையில் பரிமாறவும்.