கேரள சமையல் என்றாலே அதன் தனித்துவமான சுவை மற்றும் பாரம்பரியம் நினைவுக்கு வரும். அத்தகைய கேரள உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று, கேரள இறால் முருங்கைக்காய் குழம்பு. இது இறால் மற்றும் முருங்கைக்காயின் சுவைகளை ஒன்றுசேர்த்து, மசாலாக்களுடன் சேர்த்து சுவையாக இருக்கும். சமைப்பதற்கு எளிமையான இந்த குழம்பு, சாதம் அல்லது அப்பத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று ரேவாஸ்கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இறால் – 100 கிராம்
முருங்கைக்காய் – 1
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 5 பற்கள்
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் துருவல் – ¼ கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மல்லி தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – ½ டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால், முருங்கைக்காய், நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு, மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது, இறால் வைத்துள்ள பாத்திரத்தில் இந்த அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கலவை மூழ்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும். பின்னர், பாத்திரத்தை மூடி, அடுப்பில் மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும். இறால் மற்றும் முருங்கைக்காய் நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
கடைசியாக, ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயம், கடுகு, மற்றும் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, அதை குழம்பில் சேர்க்கவும். இப்போது சுவையான கேரள இறால் முருங்கைக்காய் குழம்பு தயாராகிவிட்டது! இதை சூடான சாதத்துடன் அல்லது உங்கள் விருப்பமான உணவோடு சேர்த்து பரிமாறி மகிழலாம். இந்த குழம்பு உங்கள் விருந்தினர்களையும் குடும்பத்தினரையும் நிச்சயம் கவரும்.