பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடும் உணவு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல கருவில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்துதான். அதனால், பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்கள் சாப்பிடும் உணவின் ஆரோக்கியம், மற்றும் ஆரோக்கியக் கேடு இரண்டுமே அவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் பாதிக்கும். அதனால், கர்ப்ப காலத்தில் பெண்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் டீ, காபி குடிப்பது தினசரி பழக்கங்களில் ஒன்றாக உள்ளது. அதனால், கர்ப்பிணி பெண்கள் டீ, காபி குடிக்கலாமா? எந்த அளவு எடுக்கலாம் போன்றவற்றைப் பற்றி பெங்களூரு கைண்டர் மருத்துவமனைகளின் மூத்த மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர் டாக்டர் யாஸ்மின் இம்தாத் அவர்கள் சில அறிவுரைக வழங்கியிருக்கிறார்.
கர்ப்பிணி பெண்கள், டீ, காபி குடிக்கலாமா? கர்ப்ப காலத்தில் டீ குடிப்பது பாதுகாப்பானதா? பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறது இந்த பதிவு.
கர்ப்ப காலத்தில் பெண்கள், காபியில் காஃபைன் என்ற பொருள் இருக்கிறது. அதனால், காபிதான் குடிக்கக் கூடாது, டீ குடிக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இதுவும் தவறு, டீயிலும் காஃபைன் உள்ளது. அதனால், காஃபைன் உள்ளிட்டவற்றை கருவுற்ற பெண்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இருக்கும் குழந்தையின் நஞ்சுக் கொடி வழியாக குழந்தைக்கும் செல்லும். அதனால், சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக டீ, காபி எடுத்துக்கொள்ளும்போது, அது நேரடியாக குழந்தையையும் பாதிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, கர்ப்பத்திற்கு முன்பு, அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல், நேரடியாக கருவளத்தைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கின்றன. அதோடு கர்ப்பம் தரிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் பெண்கள் காஃபைன் அதிகமுள்ள டீ, காபியை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அது குழந்தை எடை குறைவாக பிறக்கவும் சில சமயங்களில் குறை பிரசவம் கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள்.
அதே போல, குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைக்கு தாய்ப்பால் வழியாகச் செல்லும். இதனால், பாலூட்டும் தாய்மார்கள் அதிகமாக காஃபைன் உட்கொண்டால் குழந்தைக்கு எரிச்சல் மற்றும் நடுக்கத்தை ஏற்படுத்தும். அதனால், கர்ப்பமாக இருக்கும் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் டீ ஒரு நாளைக்கு 2 கப் தாண்டக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
காஃபின் அதிகமாக எடுத்துக் கொண்டால் சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்து, சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளையும் ஏற்படுத்தும். மேலும் சிலருக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தும். எனவே, கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மகப்பேறியல் மருத்துவர் டாக்டர் யாஸ்மின் அவர்களின் கூற்றுப்படி கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் நேரங்களிலும் பெண்கள் காஃபைன் பானங்கள் எடுத்துக் கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, குழந்தைக்கும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கலாம் என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது என்று டாக்டர் யாஸ்மின் கூறுகிறார்.