புரதச்சத்து அமினோ அமிலங்களால் ஆனது. இந்த அமினோ அமிலங்கள் தசைகளை உருவாக்கவும், உடற்பயிற்சி அல்லது அன்றாட நடவடிக்கைகளால் ஏற்படும் சேதங்களை சரிசெய்யவும் உதவுகின்றன. தசை வலிமை மற்றும் வளர்ச்சிக்கு இது இன்றியமையாதது.
புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இது பசியைக் கட்டுப்படுத்தி, தேவையில்லாமல் சிற்றுண்டி சாப்பிடுவதை குறைக்கிறது. மேலும், புரதச்சத்து தசைகளின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தி கலோரிகளை குறைக்க பயன்படுகிறது.
இதன் அடிப்படையில், புரதச் சத்து நிறைந்த சுவையான தேங்காய் பால் கொண்டை கடலை சாதம் எப்படி செய்யலாம் என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
நெய்,
மிளகு,
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்,
முந்திரி பருப்பு,
சின்ன வெங்காயம்,
பெரிய வெங்காயம்,
பச்சை மிளகாய்,
புதினா,
கறிவேப்பிலை,
இஞ்சி - பூண்டு விழுது,
தயிர்,
தக்காளி,
உப்பு,
தேங்காய் பால் மற்றும்
கொண்டை கடலை
செய்முறை:
குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். இத்துடன் சிறிது நெய் சேர்த்து சூடுபடுத்தலாம். இதில் சிறிது மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
இவற்றில் இருந்து வாசனை வந்ததும், ஒரு கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கலாம். இது கண்ணாடி பதத்திற்கு வந்த பின்னர், பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
இதில், மூன்று பச்சை மிளகாய், புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். இதற்கடுத்து ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை கலக்க வேண்டும்.
அதன் பின்னர், சிறிது தயிர், ஒரு நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும். இனி கழுவி வைத்த அரிசியை இந்தக் கலவையுடன் சேர்க்கலாம். இறுதியாக ஊற வைத்த கொண்டை கடலையை இதில் சேர்த்து வேகவைத்து எடுத்தால் சுவையான தேங்காய்பால் கொண்டை கடலை சாதம் தயாராகி விடும்.