மழை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், மொறுமொறுவென்றும் சாப்பிட ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் வேண்டுமல்லவா? அப்படி மழை நேரத்தில் சாப்பிட இந்த ஸ்நாக்ஸ் செய்து பாருங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு பிரட் மெதுவடை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பிரட்
தயிர்
உப்பு
ரவை - 50 கிராம்
அரிசி மாவு - 125 கிராம்
கொத்தமல்லி தழை
சமையல் சோடா
இஞ்சி
பச்சை மிளகாய்
வெங்காயம்
கறிவேப்பிலை
எண்ணெய்
செய்முறை:
பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து தேவைக்கேற்ப உப்பு, ரவை, அரிசி மாவு சேர்க்கவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சமையல் சோடாவை சேர்த்து, மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்து, ஒரு கடாயில் அதை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து, மெதுவடை போன்று தட்டி நடுவே ஓட்டை போட்டு, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் வடையாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான பிரட் மெதுவடை ரெடியாகி விடும். இதற்கு எப்போதும் போல சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“