நம்முடைய அன்றாட ஸ்நாக்ஸ் வகைகளில் முறுக்கு-க்கு என தனி இடம் உண்டு. குறிப்பாக பண்டிகை காலங்களில் நம்முடைய வீடுகளில் நாமே தயாரித்து அண்டை வீட்டாரோடு பகிர்ந்து உண்டு மகிழ்வோம். ஆனால், தற்போது பலரும் முறுக்கு வகைகளை கடைகளில் ஆர்டர் செய்து தான் பண்டிகை கொண்டாட்டங்களை முடித்துக் கொள்கிறார்கள்.
முறுக்கு தயார் செய்ய பலரும் சிரம் கொள்வது உண்டு. ஆனால், இந்த தீபாவளிக்கு ரேஷன் அரிசியில் மொறு மொறு முறுக்கு எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரேஷன் பச்சரிசி - 1 கிலோ
உளுந்து - 1/4 கிலோ
பாசிப்பருப்பு - 1/4 கிலோ
எள் - 1 டீஸ்பூன்
ஓமம் விதை - 1/2 டீஸ்பூன்
எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் 1 கிலோ ரேஷன் பச்சரிசி எடுத்து அதனை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். அவற்றை 2 முறை நன்கு கழுவிக் கொள்ளவும். 3வது முறை கழுவும் போது, உப்பு சேர்த்து நன்கு அரிசியை பிசைந்து கழுவிக் கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டு தண்ணீர் மேலே தெரியும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர், அரிசி நன்கு ஊறியதும், ஒரு பருத்தி துணியில் போட்டு காய வைக்கவும். வெயிலில் காய வைக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டின் உள்ளே கூட காய வைத்துக் கொள்ளலாம். அதில் ஓரளவுக்கு ஈரப்பதம் போன பிறகு தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு கடாய் எடுத்து, அதில் உளுந்து சேர்க்கவும். அடுப்பை மீடியமாக வைத்து வறுத்துக்கொள்ளவும். பிறகு அதனை தனியாக எடுத்து வைக்கவும். இதேபோல், பாசிப்பருப்பையும் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். இவை இரண்டையும் ஒன்றாக கொட்டி சூடு போகும் வரை ஒரு தட்டில் போட்டு வைக்கவும். பிறகு அப்படியே அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், ரேஷன் பச்சரிசியை மாவுக்கு அரைத்துக் கொள்ளவும். இதனை மிக்சியில் போட்டோ அல்லது கடையில் மிஷினில் கொடுத்தோ அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடையில் அரைத்தால் முறுக்கு மாவுக்கு என சொல்லி அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை பிறகு ஒரு கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும்.
இப்போது இரண்டு மாவையும் சேர்த்து ஒரு சல்லடையில் போட்டு நன்றாக சலித்து எடுக்கவும். பிறகு அவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கப் அளவு மாவு எடுத்து, அதனுடன் எள், ஓமம் மற்றும் உப்பு சேர்க்கவும். பின்னர் சூடான ஒரு கரண்டி எண்ணெய் சேர்க்கவும். இவற்றை கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
முறுக்கு சுட ஏற்ப தண்ணீர் குறைவாக சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும். பின்னர் முறுக்கு குழலில் போட்டு முறுக்கு சுத்திக் கொள்ளவும்.
இதனிடையே, ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அவை கொதித்ததும் முறுக்கு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ரேஷன் அரிசியில் மொறு மொறு முறுக்கு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.