சிறிய அளவில் ஹோட்டல் வைத்திருப்பவர்கள், மாவு வியாபாரம் செய்பவர்கள், ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி செய்ய எப்படி மாவு அரைக்க வேண்டும், என்ன விகிதத்தில் அரிசி உளுந்து போட வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
சிம்பிள் சமயல் வித் அம்மு யூடியூப் சேனலில், ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி செய்ய எப்படி மாவு அரைக்க வேண்டும் என்று டிப்ஸ் கூறியிருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு மேலாக, மாவு வியாபரம் செய்பவர்களிடம் கேட்டு செய்து காட்டியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
முதலில் ரேஷன் அரிசியை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தூசு, தும்பு, வண்டு இல்லாமல் ரேஷன் அரிசி சுத்தமாக இருக்க வேண்டும். 10 டம்ப்ளர் ரேஷன் புழுங்கல் அரிசி எடுத்துகொள்ளுங்கள். 2 டம்ப்ளர் ரேஷன் பச்சரிசி எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் தண்ணீர் ஊற்றி கழுவுங்கள். அந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு போட்டு நன்றாகப் பிசைந்து அரிசியைக் கழுவுங்கள். தண்ணீர் தெளிவாக வரும் வரை 3-4 முறை கழுவுங்கள். பிறகு தண்ணீர் ஊற்றி மூடி ஊற வையுங்கள்.
அடுத்து அதே டம்பளரில் 1 டம்ப்ளர் அளவு உளுந்து எடுத்துக்கொள்ளுங்கள். 2 முறை கழுவிக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறியதும், உளுந்து மட்டும் எடுத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். அதே போல, 1 ஸ்பூன் வெந்தயம் தனியாக ஊற வையுங்கள். 6 மணிநேரம் ஊறியதும், முதலில் வெந்தயத்தை அறையுங்கள், அதனுடன் உளுந்து போட்டு நன்றாக பொங்கி வரும் வரை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றி விடாதீர்கள்.
அடுத்து, அரிசி அரைப்பதற்கு முன்பு, கிரைண்டரில் சிறிது தண்ணீர் ஊற்றிவிட்டு அரிசியைப் போட்டு அரையுங்கள். அரிசியுடன் ஒரு கைப்பிடி அளவு உப்பு போட்டு அரையுங்கள். அரிசி கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும் விதமாக அரைத்து எடுத்துகொள்ளுங்கள். இப்போது அரிசி மாவு, உளுந்து மாவு இரண்டையும் சேர்த்து மாவு கரைத்து மூடி வைத்து விடுங்கள். நீங்கள் வழக்கம் போல, மாவை எவ்வளவு நேரம் புளிக்க வைப்பீர்களோ அவ்வளவு நேரம் கழித்து பார்த்தால் மாவு பொங்கி வந்து இருக்கும். இந்த மாவில் இட்லி செய்தால், செம சாஃப்ட்டான பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும். ரேசன் அரிசியில் இவ்வளவு சாஃப்ட் இட்லி செய்ய முடியுமா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் வீட்டில் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.