வீட்டில் தினமும் ஒரே சப்பாத்தி, அதே வறட்டி மாதிரி, சாப்பிட்டு தொலைக்கனும் என்று அலுத்துக் கொள்கிறீர்களா, கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டில் ரவை இருக்கிறதா? ரவை மட்டும்ம் இருந்தால் போதும் வித்தியாசமான டேஸ்ட்டில் ஒரு சூப்பர் சப்பாத்தி சாப்பிட வழி சொல்கிறோம்.
உங்களுடைய வீட்டில் ரவை இருந்தால் வித்தியாசமான சுவையில் இப்படி ஒரு சப்பாத்தி செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவையாக இருக்கும். பிறகு, தினமும் சப்பாத்தியா என்று அலுத்துக்கொள்ள மாட்டீர்கள். சுவையான ரவை சப்பாத்தி எப்படி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ரவை சப்பாத்தி செய்முறை:
வருக்காத 1 கப் அளவு ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். (உப்புமாவுக்கு பயன்படுத்தும் பாம்பே ரவை தான்.)
அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து, அதில் 1 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அந்த தண்ணீர் லேசாக கொதி வந்த உடனேயே, எடுத்து வைத்திருக்கும் ரவையை தண்ணீரில் கொட்டி, கரண்டியை வைத்து கலக்க தொடங்க வேண்டும். ரவை கட்டி பிடிக்க கூடாது.
3 நிமிடத்தில் ரவை தண்ணீரையெல்லாம் உறிஞ்சியதும் அடுப்பை அணைத்துவிட்டு, இதை ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் அந்த சூட்டிலேயே கடாயில் விட்டு விடுங்கள்.
ஐந்து நிமிடத்தில் ரவை வெந்து நமக்கு கிடைக்கும். ஆனால், அந்த ரவை சூடோடுதான் இருக்கும். இந்த கடாயில் இருக்கும் ரவையை அகலமான பேஷனில் மாற்றி, கையில் கொஞ்சம் தண்ணீரை தொட்டுக்கொண்டு பிசைய தொடங்க வேண்டும்.
கையில் அடிக்கடி தண்ணீரை தொட்டுக்கொண்டு மாவை பிசையுங்கள். அப்போதுதான் கை சுடாமல் இருக்கும்.
மாவு ரொம்பவும் வரவரன்னு கட்டியானது போல தான் இருக்கும். (எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீர் தெளித்து பிசைய கூடாது.)
ஆனாலும், நீங்கள் பிசையும் போது தண்ணீரில் கையை நனைத்து நினைத்து பிசைவீர்கள் அல்லவா, அந்த தண்ணீரே போதுமானது.
சூடாக இருக்கும் அந்த மாவை இரண்டு நிமிடம் தொடர்ந்து பிசைந்தால் வெடிப்புகள் இல்லாமல் சூப்பரான சப்பாத்தி மாவு மாதிரியே, ரவை மாவு தயாராகிவிடும். இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ரவை உருண்டைகளை அரிசிமாவை தொட்டு தேய்க்க வேண்டும். சப்பாத்தி தேய்ப்பது போலவே தேய்த்து எல்லா சப்பாத்தியையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
இதையடுத்து, தேய்த்து வைத்திருக்கும் ரவை சப்பாத்திகளை தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்க வேண்டும். அடுப்பில் கல்லை வைத்து, நன்றாக சூடானதும் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கம் திருப்பி திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். எண்ணெய் தேவைப்படாது. சப்பாத்தி வெந்து நன்றாக உப்பி வரும்போது சப்பாத்தியை தோசைக்கல்லில் இருந்து எடுத்து விடுங்கள்.
தேவைப்பட்டால் இறுதியாக நெய் அல்லது வெண்ணெய் தடவி சாப்பிடும்போது ருசி இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இதை ட்ரை பண்ணி பாருங்கள். பிறகு, தினமும் அதே சப்பாத்தியா என்று அலுத்துக்கொள்ளாமல், தினமும் அதே சப்பாத்தி கொடுங்கள் என்று கேட்டு சாப்பிடுவீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.