இனிப்பு யாருக்குதான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு ருசித்து சாப்பிடுவார்கள். அதுவும் வீட்டிலே செய்த இனிப்பு என்றால் மேலும் சிறப்பு. இப்போது பண்டிகைக்காலம் தொடங்கி விட்டது. குழந்தைகளுக்கும் விடுமுறை விட்டாச்சு. வீட்டிலேயே ஈஸியாக பலகாரம் செய்து சாப்பிடலாம். வீட்டிலே செய்வதால் நம் தேவைக்கு ஏற்ப சுவையாக செய்யலாம். அந்தவகையில் ரவா லட்டு செய்வது மிகவும் எளிது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். ஆனால் 2, 3 நாட்களில் ரவா லட்டு இறுகிவிடுவதை கவனித்திருப்பீர்கள். இதற்கு டிப்ஸ் இருக்கிறது. ரவா லட்டு இறுகிவிடாமல் இருக்க இப்படி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
ரவை – 2 கப்
நெய் – 6 டீ ஸ்பூன்
முந்திரி, திராட்சை – 1 கைப்பிடி
பாதாம், பிஸ்தா, பூசணி விதை , முந்திரி – 1 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
ஏலக்காய் – 10
காய்ச்சிய சூடான பால் – 1/2 கப்
செய்முறை
முதலில் கடாயில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சைகளை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின், பூசணி விதை, பாதாம் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். அடுத்து, மீண்டும் கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து எடுத்து வேண்டும். பின் அதிலே கொஞ்சம் நெய் விட்டு ரவையை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். பின் அரைத்த சர்க்கரையை ரவையில் சேர்த்து கிளறவும். பின் தேங்காய், நட்ஸ் பொடிகளை சேர்த்து கலக்க வேண்டும்.
அடுத்து முந்திரி திராட்சையை சேர்த்து கலந்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சிய பாலை சேர்த்து கலந்துவிடுங்கள். கையில் மாவு கையில் ஒட்டும் பதத்தில் எடுத்து தட்டில் ஊற்றி 2 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின், உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும். மாவு இப்படி செய்தால் உருண்டை பிடிப்பதற்கு எளிதாகவும், ரவா லட்டு இறுகாமல் இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil